தமிழ்நாடு அரசுப் பணிகளில் பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில், ஆதரவற்ற விதவைகளுக்கு வழங்கப்பட்டு வரும் 10 சதவீத உள் இடஒதுக்கீட்டு முறையில் முக்கிய சீர்திருத்தத்தை அரசு மேற்கொண்டுள்ளது. பொருளாதார மாற்றங்களை கருத்தில் கொண்டு, இந்த சலுகையைப் பெறுவதற்கான தகுதி வரம்பில் நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு அதிரடி மாற்றத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுவரை, ஆதரவற்ற விதவை என்பதற்கான சான்றிதழ் பெற்று வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற வேண்டுமானால், சம்பந்தப்பட்ட பெண்ணின் மாத வருமானம் ரூ.4,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. தற்போது நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் வாழ்வாதார செலவுகளைக் கணக்கில் கொண்டு, இந்த வருமான உச்சவரம்பை 8,000 ரூபாயாக உயர்த்தி அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அதிரடி முடிவின் மூலம், முன்னதாக வருமான வரம்பு காரணமாகச் சலுகை மறுக்கப்பட்ட பல ஏழைப் பெண்களுக்கு இனி அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில், இந்தச் சலுகை யாருக்குப் பொருந்தும் என்பது குறித்தும் அரசு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. சட்டப்பூர்வமாக தனது கணவரை இழந்த பெண்களுக்கு மட்டுமே இந்த 10 சதவீத உள் இடஒதுக்கீடு பொருந்தும். நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்ற பெண்கள், இந்தப் பிரிவின் கீழ் முன்னுரிமை கோர முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வருமான வரம்பு உயர்வு, கணவரை இழந்து வாழ்வாதாரத்திற்காக போராடும் பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.



