அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகளாவிய டிஜிட்டல் கட்டண நிறுவனமான பேபால்(PayPal), இந்தியாவின் UPI-ஐயுடன் கைகோர்த்துள்ளது. இதன்மூலம், இந்தியர்கள் வெளிநாட்டில் ஷாப்பிங் செய்வதற்கு யுபிஐ-யை பயன்படுத்தி பணத்தை செலுத்தலாம்.
இந்தியாவில்,மளிகை, உள்ளிட்ட பொருட்களுக்கு UPI மூலம் பணம் செலுத்துவது போல, எல்லைகளைக் கடந்து வெளிநாட்டிலும் இதை செயல்படுத்தும் நோக்கத்தில், உலகளாவிய டிஜிட்டல் கட்டண நிறுவனமான PayPal, நேற்று புதன்கிழமை, “PayPal World” எனும் உலகளாவிய பண பரிமாற்ற தளத்தை அறிமுகம் செய்தது. இந்த தளம், உலகின் பெரிய டிஜிட்டல் வாலட்ஸ் மற்றும் பண பரிமாற்ற அமைப்புகளுடன், இந்தியாவின் UPIயையும் இணைத்துள்ளது.
இந்த நடவடிக்கை, சுமார் இரண்டு பில்லியன் பயனர்களுக்கு இடையேயான தடையில்லா பணப்பரிமாற்றத்தை கொண்டு வரக்கூடும். இந்த இலையுதிர் காலம் தொடங்கி, UPI போன்ற உள்நாட்டு டிஜிட்டல் வாலட் பயனர்கள் தங்களிடம் இருக்கும் பணப்பரிமாற்ற செயலிகளைக் கொண்டு சர்வதேச அளவில் ஷாப்பிங் செய்யப்படும் பொருட்களுக்கு பணம் செலுத்த மற்றும் அனுப்பும் வசதியை பெறுவார்கள். இந்த தளம் முதலில் PayPal, Venmo, UPI, Mercado Pago மற்றும் Tencent’s Tenpay Global ஆகியவற்றை இணைக்கும்.
இதன்மூலம் இந்தியாவின் யுபிஐ உலகளாவிய பணப்பரிமாற்ற அமைப்புகளில் ஒரு பகுதியாக இருக்கும். NPCI இன்டர்நேஷனல் பேமென்ட்ஸ் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ரித்தேஷ் சுக்லா, இது “UPI-யின் உலகளாவிய பாதையை விரிவுபடுத்தும் ஒரு முக்கியமான முன்னேற்றமான அடியெடுத்து வைக்கும் பயணம்” என தெரிவித்துள்ளார். “சர்வதேச பண பரிமாற்றங்களை மேலும் எளிதானதாகவும், பாதுகாப்பானதாகவும், உள்ளடக்கியதாகவும் (inclusive) மாற்றும் எங்கள் பார்வைக்கு இது முழுமையாக ஒத்துவரும். இந்த ஒத்துழைப்பு, வெளிநாட்டில் பணம் செலுத்தும் இந்திய பயனர்களுக்கான வசதிகளை அதிகரிக்கும்,” என தெரிவித்துள்ளார்.
இந்த தளம் செயல்பாட்டில் வந்ததும், UPI பயன்படுத்தும் இந்தியா வாடிக்கையாளர்கள், PayPal-ஐ ஆதரிக்கும் சர்வதேச e-commerce தளங்களில் தங்கள் வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்தலாம். நாணய மாற்றத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் இல்லை, பல்வேறு செயலிகளை மாற்றி பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.
“PayPal Worldஆல் இந்திய பயனர்களுக்கு என்ன நன்மை? இந்திய வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக ஏற்கனவே UPI-யின் வசதிக்கு பழகி உள்ளவர்களுக்கு, இது புதிய அளவிலான அணுகலுக்கு வாய்ப்பை திறக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஒரு கடையில் எதாவது பொருட்கள் வாங்கி, நேரடியாக UPI மூலம் பணம் செலுத்துவது, அல்லது சீனாவில் உள்ள ஒரு கஃபே-இல் QR குறியீட்டை PayPal-ல் ஸ்கேன் செய்வது போன்ற அனுபவங்கள் கிடைக்கும். இவை எல்லாம் இதற்கு முன் சர்வதேச கிரெடிட் கார்டுகள் அல்லது மூன்றாம் தரப்பினர் வாயிலாக (third-party gateways) மட்டுமே சாத்தியமாக இருந்தன. இந்த வகையான சிக்கல்களை நீக்கவே PayPal நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள Venmo பயனாளர்களும் இதனால் பயனடைய உள்ளனர். அவர்கள் விரைவில், உலகம் முழுவதிலும் உள்ள PayPal பயனாளர்களுக்கு நேரடியாக பணம் அனுப்பக்கூடிய வசதியை பெறுவார்கள். இதனால், மற்றொரு நபருக்கு பணம் அனுப்பும் சர்வதேச பரிமாற்றம் (peer-to-peer transfers) மேலும் எளிமையாகும். “உலகம் முழுவதும் பணம் அனுப்புவது, ஒரு மெசேஜ் அனுப்புவது போல எளிதாகிவிடும்,” என PayPal நிறுவனம் தனது செய்திகுறிப்பில் தெரிவித்தது.
ஆன்லைன் வணிகர்களுக்கும் சிறிய தொழில்முனைவோர்களுக்கும், இது மிகப் பெரிய நன்மையாகும். இனிமேல் வணிகர்கள், தனித்தனி கட்டண அமைப்புகளை உருவாக்க வேண்டியதில்லை, அல்லதுஒவ்வொரு நாட்டின் உள்நாட்டு கட்டண விதிமுறைகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதுமில்லை. PayPal World இதை ஒரு முன்மாதிரியாகக் கையாளும். இதன் பொருள் இந்தியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் சீனாவில், கூடுதல் டெவலப்மெண்ட் வேலைகள் இல்லாமல், வணிக சந்தைகளில் எளிதாக நுழையலாம் என்பதுதான்.
PayPal நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அலெக்ஸ் கிரிஸ் (Alex Chriss), இந்த தளத்தை “முதன்முறையாக உருவாக்கப்பட்ட தனிச்சிறப்பான ஒரு கட்டண சூழல் அமைப்பு” (first-of-its-kind payments ecosystem) என குறிப்பிட்டார். “எல்லைகளை கடந்து பணம் பரிமாற்றுவது என்பது மிகவும் சிக்கலான ஒரு வேலை. ஆனால், இந்த தளத்தின் மூலம், சுமார் இரண்டு பில்லியன் பயனாளர்களுக்கும் வணிகங்களுக்கும், அது மிகவும் எளிமையானதாக ஆகிவிடும்,” என்றார்.
இது எவ்வாறு செயல்படுகிறது? PayPal World, திறந்த வர்த்தக APIக்கள் (open commerce APIs) பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் பல பிராந்தியங்களில் இயங்கக்கூடிய cloud-native அமைப்பில் செயல்படுகிறது. இது அளவிடக்கூடியதாகவும், குறைந்த தாமதமாகவும், பாதுகாப்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது device-agnostic ஆகும், அதாவது இது வெவ்வேறு சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் வேலை செய்கிறது.
இந்த தளம், புதிய வகை கட்டண முறைகளையும் ஆதரிக்கும் என PayPal நிறுவனம் தெரிவித்துள்ளது . அதில் ஸ்டேபிள்காயின்கள் (Stablecoins) மற்றும் ஏஐ அடிப்படையிலான ஷாப்பிங் கருவிகள் (AI shopping tools) உட்பட உள்ளன. உதாரணமாக, நுகர்வோர் இறுதியில் ஒரு AI உதவியாளரிடம் தங்கள் வாலட்களை பயன்படுத்தி ஆர்டர்களை வழங்கவும் பணம் செலுத்தவும் கேட்கலாம். இந்த தளத்தின் அறிமுகம் இந்த ஆண்டிற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, முதலில் PayPal மற்றும் Venmo இடையிலான இணைப்புடன் துவங்கும். அதற்குப் பிறகு, UPI, Tenpay போன்ற பிற டிஜிட்டல் பணப்பைகள் விரைவில் இணைக்கப்படும். காலப்போக்கில், இன்னும் பல நாடுகள் இந்த தளத்தில் இணைய ஏற்பாடுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.