போலீசார் தாக்கி உயிரிழந்த அஜித்குமார் தம்பி நவீன் குமாருக்கு அரசுப்பணி நியமன ஆணையை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு புகாரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித் என்ற இளைஞர் உயிரிழந்தார்.. காவல்துறை கொடூரமாக தாக்கியதே காரணம் என்பது பிரேத பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 5 காவலர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வாக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனிடையே மானாமதுரை டிஎஸ்பி சண்முக சுந்தரம் பணியிடை நீக்கம் செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டது. ஏற்கனவே சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் சிவகங்கை மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமாரின் தாயார் மற்றும் குடும்பத்தினரை அமைச்சர் பெரிய கருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஜித்குமாரின் தாயாரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களிடம் பேசிய முதல்வர், அரசின் அனைத்து நிபாரணங்களையும் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், அஜித்குமாரின் சகோதரருக்கு நிரந்தர அரசு வேலை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். இந்த நிலையில் போலீசார் தாக்கி உயிரிழந்த அஜித்குமார் தம்பி நவீன் குமாருக்கு அரசுப்பணி நியமன ஆணையை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார். மேலும் அஜித்தின் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டாவும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
Read more: Rapido, Uber பைக் டாக்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி.. ஆனா ஒரு ட்விஸ்ட்..