இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணமாக திகழும் ஆதார் அட்டையை நிர்வகிக்கும் ‘இந்திய தனித்துவ அடையாள ஆணையம்’ (UIDAI), நாடு முழுவதும் உள்ள அதன் சேவை மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இந்த மையங்களில், ‘ஆதார் சூப்பர்வைசர்’ மற்றும் ‘ஆபரேட்டர்’ பணிகளுக்காக தகுதியான விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 31-ஆம் தேதி (சனிக்கிழமை) கடைசி நாள் என்பதால், ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இன்னும் இரண்டு நாட்களே கால அவகாசம் உள்ளது.
மொத்தம் 282 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தருமபுரி, நீலகிரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தம் 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 4, கர்நாடகாவில் 10, கேரளாவில் 11 மற்றும் புதுச்சேரியில் ஒரு பணியிடம் எனத் தென்னிந்தியா முழுவதும் பரவலாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பணிக்குத் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் 20,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் ஐடிஐ (ITI) அல்லது மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதை எட்டியிருக்க வேண்டும். மிக முக்கியமாக, அங்கீகரிக்கப்பட்ட தேர்வு முகமையால் (Testing and Certifying Agency) வழங்கப்பட்ட ‘Aadhaar Supervisor/Operator’ சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முறையின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் csc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து, இறுதித் தேதிக்கு முன்னதாகவே சமர்ப்பிப்பது அவசியமாகும். ஜனவரி 31-ஆம் தேதியுடன் விண்ணப்ப அவகாசம் நிறைவடைவதால், அரசுப் பணியில் சேர விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை விரைந்து பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



