பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் திருக்கோவிலில், உலகப்புகழ் பெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 19ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. ராப்பத்து, பகல்பத்து என விமரிசையாக நடைபெற்று வரும் இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வான நம்மாழ்வார் மோட்சம் வரும் ஜனவரி 9ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இந்த விழாவின் உச்சகட்ட நிகழ்வான ‘பரமபத வாசல்’ எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு, வரும் 30ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதை காண்பதற்காக தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வருகையை முன்னிட்டும், அவர்கள் தடையின்றி தரிசனம் செய்யவும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வை முன்னிட்டு வரும் 30ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜனவரி மாதம் 24-ம் தேதி (சனிக்கிழமை) திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : தவெகவில் வெடித்தது அதிகார மோதல்..!! விஜய் கார் முன் பாய்ந்த பெண் நிர்வாகி அஜிதா..!! பின்னணி என்ன..?



