மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் படி, ஆப்பிள், சாம்சங், விவோ, ஓப்போ போன்ற அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தாங்கள் விற்பனை செய்யும் புதிய மொபைல்களில் அரசு உருவாக்கிய “Sanchar Sathi” என்ற சைபர் பாதுகாப்பு செயலியை கட்டாயமாக முன்பே நிறுவி வைக்க வேண்டும். இந்த உத்தரவை 90 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
செயலியை (Sanchar Sathi) பயனர் நீக்கவோ முடக்கவோ முடியாத வகையில் நிறுவப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.. அதாவது, மொபைலை வாங்கும் பயனர்கள் அந்த ஆப்-ஐ அன்இன்ஸ்டால் செய்ய முடியாத வகையிலும் டிஸ் ஏபிள் செய்ய முடியாத வகையிலும் நிறுவப்பட வேண்டும்.. மத்திய அரசின் இந்த நடவடிக்கை முழுவதும் சைபர் மோசடிகளைத் தடுக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
Sanchar Sathi App என்பது என்ன?
Sanchar Sathi என்பது முதலில் மே 2023-ல் இணையதள வடிவில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசின் சேவையின் மேம்படுத்தப்பட்ட செயலி (app) ஆகும். 2024 ஜனவரியில், தொலைத்தொடர்பு துறை (DoT) இதற்கான Android மற்றும் iOS மொபைல் செயலிகளையும் வெளியிட்டது.
மொபைல் போன் மோசடிகள், சிம் கார்டு தவறான பயன்பாடு, மொபைல் திருட்டு, அடையாள திருட்டு (identity fraud) போன்ற பிரச்சினைகளை கண்டறிந்து புகார் செய்ய பயனர்களுக்கு உதவுவதே இந்த செயலியின் முக்கிய நோக்கமாகும்.. Sanchar Sathi என்பது போன் திருட்டு மற்றும் டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்கும் அரசின் பாதுகாப்பு செயலி; இது உங்கள் மொபைல் எண்களுக்கான பாதுகாப்பு விவரங்களையும் வழங்குகிறது.
Sanchar Sathi App வழங்கும் முக்கிய வசதிகள்
திருட்டு / இழப்பு – Block செய்யும் வசதி
உங்கள் மொபைல் போன் திருடப்பட்டாலோ அல்லது இழந்தாலோ, இந்த செயலி மூலம் நாட்டிலுள்ள அனைத்து டெலிகாம் நெட்வொர்க்குகளிலும் அதை உடனே block செய்யலாம். இதை யார் எங்கு பயன்படுத்தினாலும், காவல்துறை அதன் இருப்பிடத்தைப் பின்தொடர (trace) செய்ய உதவும்.
மோசடி புகார்
ஏமாற்றும் கால்கள், SMS, WhatsApp மெசேஜ்கள் போன்றவற்றை நேரடியாக அரசிடம் புகார் செய்யலாம். இது டிஜிட்டல் மோசடிகளை தடுப்பதற்கான முக்கிய கருவி.
உங்கள் பெயரில் உள்ள சிம் எண்களை சரிபார்க்கலாம்
உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து மொபைல் எண்களையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஏதேனும் அறியாத/அனுமதியற்ற SIM உங்கள் பெயரில் இருப்பதை கண்டால், அதைப் புகார் செய்யலாம். நீங்கள் பயன்படுத்தும் மொபைல் போன் மூலமானதா, duplicate/போலி சாதனமா என்பதை சரிபார்க்க உதவுகிறது. IMEI எண்ணை மூலம் போனின் நம்பகத்தன்மை மற்றும் விவரங்களை அறியலாம்.
சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தடுக்கும் நோக்கம்
Sanchar Sathi செயலியை அனைத்து முக்கிய ஸ்மார்ட்போன்களிலும் முன்கூட்டியே நிறுவச் (pre-install) செய்வதன் மூலம், நாட்டில் அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடிகள் மற்றும் தொலைத்தொடர்பு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்த தான் அரசு முயற்சி செய்கிறது.
ஏன் இது அவசியம்?
பல மோசடிகளில், குற்றவாளிகள் மொபைல் போன்களின் IMEI எண்ணை போலியாக மாற்றி பயன்படுத்துகின்றனர். IMEI என்பது ஒவ்வொரு மொபைல் போனுக்கும் வழங்கப்படும் தனித்துவமான 15 இலக்க அடையாள எண். இதை மாற்றுவது அல்லது duplicate IMEI வைத்திருப்பது போன்றவை பெரிய அளவிலான ஸ்காம், நெட்வொர்க் துஷ்பிரயோகம், கண்காணிப்பு தவிர்ப்பு போன்ற குற்றங்களுக்கு வழிவகுக்கும்.
சட்டப்படி தண்டனை
தகவல் தொடர்பு சட்டம், 2023 படி, மொபைல் போனின் IMEI போன்ற அடையாளங்களை மாற்றுவதோடு தொடர்புடைய குற்றங்கள் மிகவும் கடுமையாகக் கருதப்படுகின்றன:
அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை
அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை அபராதம்
அல்லது இரண்டும் சேர்ந்து வழங்கப்படலாம்.
போன் அமைப்பதிலிருந்தே செயலி அவசியம்
மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சகம் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்கி உள்ளது.. Sanchar Sathi செயலி போன் செட்டப் செய்யும் முதல் கட்டத்திலிருந்தே எளிதில் கண்டுபிடிக்கவும் பயன்படுத்தவும் கூடியதாக இருக்க வேண்டும். செயலி சரியாக செயல்பட்டு, பயனர்களுக்கு மோசடிகளை அறிய, புகார் செய்ய, மொபைல் பாதுகாப்பை பராமரிக்க உதவ வேண்டும்.
அரசின் இந்த முயற்சி, IMEI துஷ்பிரயோகம் மூலம் நடைபெறும் ஆன்லைன் மோசடிகளை குறைக்கும் நோக்கத்தையும், மொபைல் பயனர்களை பாதுகாப்பதையும் அரசின் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது.



