மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இங்கு படகு போக்குவரத்தை தான் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நைஜீரியாவில் உள்ள சொஹொடா மாகாணம், கடா கிராமத்தை சேர்ந்த 50 பேர் சந்தைக்காக படகில் பயணித்த போது படகு கவிழ்ந்து பெரிய விபத்து நிகழ்ந்துள்ளது.
கடா கிராமத்தை சேர்ந்த மக்கள் அந்த மாநிலத்தின் பிரபலமான உணவுப் பொருட்கள் சந்தையான கோரோனியோ சந்தைக்குச் நேற்று மதியம் படகு மூலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்து ஆற்றில் விழுந்த 10 பேரை உயிருடன் மீட்டனர். இருப்பினும், மீதமுள்ள 40 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை, அவர்கள் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விபத்து நடந்து 24 மணி நேரத்திற்கும் மேலாகியும் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. விபத்து நிகழ்ந்து வெகு நேரம் ஆகுவதால் காணாமல் போன 40 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
படகு போக்குவரத்து அதிகமாக உள்ள நைஜீரியாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரை நிலவும் மழைக்காலத்தில், ஆறுகள் மற்றும் ஏரிகள் வெள்ளம்போல் நிரம்பி வழியும் நிலையில், படகு விபத்துக்கள் அதிகம் நடைபெறுவதும், அதனால் பல உயிரிழப்புகளும் நிகழ்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 2024-ல், சோகோட்டோ மாநிலத்தில் ஒரு படகு, விவசாயிகளை நெல் வயல்களுக்கு அழைத்துச் சென்ற போது, விபத்தில் சிக்கியது. இந்தக் கோர சம்பவத்தில் குறைந்தது 16 விவசாயிகள் உயிரிழந்தனர்.
அதற்குப்பின், கடந்த மாதம் நைஜரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள நைஜர் மாநிலத்தில் சுமார் 100 பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு படகு கவிழ்ந்ததில், குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காணாமற்போனதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து வெறும் இரண்டு நாட்களுக்குள், ஜிகாவா மாநிலத்தில் விவசாய பணியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த குழுவினர் சென்ற படகு ஆற்றின் நடுவே கவிழ்ந்ததில் ஆறு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொடர் விபத்துகள், நைஜீரியாவில் நீர்வழிப் போக்குவரத்தில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் நவீன வசதிகளின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.