கென்யாவில் துக்க நிகழ்ச்சிக்காக சென்றவர்களின் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு கென்யாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ககமேகா என்ற நகரத்தில் ஒரு இறுதிச் சடங்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த துக்க நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் துக்க நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு பேருந்தில் கிசுமு கவுண்டி என்ற பகுதிக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 21 பேர் பலியாகினர். அவர்களில் 10 பெண்கள், 10 ஆண்கள் மற்றும் 10 வயதுடைய சிறுமி ஆவர். மேலும், விபத்தில் 29 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். முறையான சாலை வசதிகள் இல்லாததே விபத்துக்குக் காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.