உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டதன் மூலம், தரமான உடற்பயிற்சி வசதிகள் குடிமக்களுக்கு மேலும் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய அரசு அண்மையில் அறிவித்த சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தங்கள், நாட்டின் இளைஞர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி எளிதான வாழ்க்கைக்கு உதவும் நடவடிக்கையாகும். உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டதன் மூலம், தரமான உடற்பயிற்சி வசதிகள் குடிமக்களுக்கு மேலும் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை உடற்பயிற்சி நடவடிக்கைகளில் பெருமளவில் பங்கேற்பதை ஊக்குவிக்கும். இது ஃபிட் இந்தியா இயக்கத்தின் நோக்கங்களுக்கு நேரடியாக ஆதரவளிக்கும். மிதிவண்டிகள் மற்றும் அதன் உபகரணங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த போக்குவரத்தை மக்கள் மேலும் குறைந்த செலவில் அணுக உதவும்.
மாணவர்கள், இளைய தொழில் வல்லுனர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்கள் ஆகியோரிடையே மிதிவண்டி பயன்பாட்டை ஊக்குவிக்கும். பொம்மைகள் முதல் விளையாட்டு பொருட்கள் வரை சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டதன் மூலம், விளையாட்டு தொடர்பான பொருட்களை விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்கள் எளிதாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.