சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வந்த கோவில் காவலாளி அஜித் குமார், அங்கு சாமி கும்பிட வந்த நிகிதா என்னும் பெண்ணின் நகை காணாமல் போன வழக்கில், தனிப்படைக் காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் தாக்கிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நிகிதா என்னும் பெண் ஏற்கனவே ஒரு மோசடிப் பேர்வழி என்பதும், அவர்மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் கடந்த 2011-ம் ஆண்டு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான எஃப்.ஐ.ஆர்-உம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அஜித்குமார் பிரேதப்பரிசோதனை அறிக்கையில், 44 இடங்களில் உடலில் ரத்த கசிவு மற்றும் சிராய்வுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அஜித்குமார் சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
மேலும் காவல்துறையினர் தாக்கியத்தில் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 5 தனிப்படை காவலர்கள் கைசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டு சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிஐ துணைக் கண்காணிப்பாளா் மோஹித்குமாா் நியமிக்கப்பட்டார்.
30 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தி பல்வேறு ஆவணங்களைச் சேகரித்தனர். மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக, சிபிஐ சார்பில் மதுரை ஐகோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், பேராசிரியை நிகிதாவின் கார் பார்க்கிங் பகுதியை விட்டு வெளியே செல்லவில்லை என்ற விவரம் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நகை திருட்டு சம்பவம் உண்மையில் நடந்ததா என்ற கேள்வியும் குற்றப்பத்திரிகையில் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read more: UPI புதிய விதி: PhonePe, Google Pay பயனர்களுக்கு ஷாக் நியூஸ்.. இனி இப்படி பணம் அனுப்ப முடியாது!



