தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, 30 சதவீதம் வரை, பதிவுத்துறை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பு என்பது தமிழ்நாட்டில் தமிழ்நாடு பதிவுத் துறையால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சொத்து மதிப்பாகும், இது முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்களைக் கணக்கிடப் பயன்படுகிறது. இதை TNREGINET வலைத்தளம் வழியாகச் சரிபார்த்து, நிலத்தின் வழிகாட்டி மதிப்பை அறியலாம். தமிழகத்தில் நிலங்களுக்கு, ‘சர்வே’ எண் மற்றும் தெரு வாரியாக வழிகாட்டி மதிப்புகளை, பதிவுத்துறை நிர்ணயிக்கிறது.
இந்த மதிப்புகள் அடிப்படையில், சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யப்படும். கடந்த, 2012ம் ஆண்டு தான் வழிகாட்டி மதிப்புகள், ஒட்டுமொத்தமாக சீரமைக்கப்பட்டன. அதன்பின், அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. கடந்த 2023ல் நடைமுறையில் இருந்த வழிகாட்டி மதிப்பில், 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதற்கான காரணமாக, வழிகாட்டி மதிப்புகளில் காணப்பட்ட வேறுபாடுகள் சரி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனால், 2012க்கு பின் வழிகாட்டி மதிப்புகள் உயர்த்தப்படவில்லை என்ற கருத்தில், பதிவுத்துறை அதிகாரிகள் இருக்கின்றனர். அதே நேரம், வழிகாட்டி மதிப்புகளை சீரமைக்க, உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுதும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவுமின்றி, வழிகாட்டி மதிப்புகள், 30 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளன. சமீபத்தில் நடந்த சீராய்வு கூட்டங்களில், புதிதாக பதிவுக்கு பத்திரங்கள் வரும் போது, வழிகாட்டி மதிப்பை 30 சதவீதம் வரை உயர்த்தி, அதற்கு ஏற்ப முத்திரை தீர்வை, கட்டணங்களை வசூல் செய்ய, அமைச்சர் மூர்த்தி வாய்மொழி உத்தரவு பிறப்பித்து உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.



