சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டண வசூலுக்கான ஒப்பந்தம் ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இதன் காரணமாக, தற்போது நகரத்தில் உள்ள மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்கும் வாகன நிறுத்துமிடங்களில் பொதுமக்கள் எந்தவிதமான கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை மாநகராட்சி பகுதியில் வாகன நிறுத்தக் கட்டண வசூல் பணியானது தமிழ்நாடு முன்னாள் படை வீரா் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூலை 20) முடிவடைந்துவிட்டது.
இதையடுத்து சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தத்துக்கான ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மறு ஒப்பந்தம் மேற்கொள்ளும் வரை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தும்போது ஏற்படும் பிரச்னைகள் தொடா்பான புகாா்களுக்கு 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து எங்கு பார்க் செய்ய வேண்டும், எங்கு கூடாது என்பதற்கான அடிப்படை விதிகள் முந்தையதுபோலவே தொடரும் எனவும், பாதுகாப்பான பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவது அவசியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மாநகராட்சியின் நிர்வாகத்தில் உள்ள பார்கிங் இடங்களுக்கு மட்டுமே பொருந்தும். தனியார் மாடல் மால், கமெர்ஷியல் வளாகங்களில் பார்கிங் கட்டணங்கள் தொடரும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.