தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளை ஆன்லைன் மூலமே பெற்றுக் கொள்ள முடியும். ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யவும், புதிய ரேஷன் கார்டு கோரியும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் ரேஷன் கார்டுகள் மூலமாகவே பெரும்பாலும் வழங்கப்படுகிறது. எனவே, ரேஷன் கார்டுகள் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரேஷன் கடைகள் மூலமே பெண்களுக்கான உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்படுகிறது.
இந்நிலையில், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் முதல் பெயர் மாற்றம், சேர்த்தல், நீக்கல் வரை என அனைத்து சேவைகளுக்கும் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்கலாம். நீங்கள் எதற்காக விண்ணப்பிக்கிறீர்களோ, அதற்கான ஆவணங்களை மட்டும் சரியாக சமர்பிக்க வேண்டும். அதன்படி, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, ஆதார் கார்டு, குடும்ப தலைவியின் புகைப்படம், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு, மின் கட்டண ரசீது, வீட்டு வரி ரசீது உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், வட்டார வழங்கல் துறை அதிகாரிகள் அவற்றின் உண்மை தன்மை சரிபார்ப்பார்கள். பிறகு, புதிய ரேஷன் கார்டுக்கு ஒப்புதல் அளிப்பார்கள். குறைந்தபட்சம் 15 நாட்கள் முதல் சில மாதங்கள் வரை இந்த ஒப்புதலுக்கான காலம் இருக்கும். ஒப்புதலுக்குப் பின் உங்களின் புதிய ரேஷன் கார்டு பிரின்டுக்கு சென்றுவிடும்.
ஆனால், பிரின்ட் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வருவதற்கு முன்பே மின்னணு ரேஷன் கார்டை உங்களால், பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஆனால், அதை வைத்து உங்களால் முதன்முறை பொருட்கள் வாங்க முடியாது. பிரின்ட் ரேஷன் கார்டு வந்த பிறகு குடும்ப தலைவி ரேஷன் கடைக்கு சென்று, கைரேகை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பிறகு தான் உங்கள் ரேஷன் கார்டு ஆக்டிவேட் ஆகும்.
மின்னணு ரேஷன் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி..?
* ரேஷன் கார்டு ஒப்புதல் மெசேஜ் வந்ததும், டிஎன்பிடிஎஸ் (Tnpds) என்ற வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும்.
* அதில், பயனாளர் நுழைவு என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
* பிறகு, ரேஷன் கார்டில் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். இப்போது உங்களுக்கு ஓடிபி வரும்.
* அதனை உள்ளிட்டீர்கள் என்றால், மின்னணு ரேஷன் கார்டு உங்களுக்கு காண்பிக்கும்.
* பின்னர், அதனை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
* அரசு சார்ந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்கும்போது, உங்களுக்கு மின்னணு ரேஷன் கார்டு உதவியாக இருக்கும்.