ஜோதிட ரீதியாக ஒருவரின் கோபம், சண்டை சச்சரவுகள், உறவியல் சிக்கல்கள் ஆகியவற்றிற்கு காரணமான கிரகம் செவ்வாய் என்று கருதப்படுகிறது. ஜாதகத்தில் செவ்வாய் துஷ்ட நிலையிலிருந்தால், அந்த நபருக்கு அடிக்கடி கோபம் வரும். அந்தக் கோபத்தின் விளைவாக வேலை, சொத்து, உறவுகள் போன்றவற்றிலும் இழப்புகள் ஏற்படலாம். குறிப்பாக, லக்னத்தில் செவ்வாய் இருந்தால், அந்த நபருக்கு அகங்காரம், தலைக்கனம், “நான் தான்” என்ற மனோபாவம் அதிகமாகும்.
இந்த நிலையில் செவ்வாய் காரணமாக ஏற்பட்ட கோபம், இழப்புகள், கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி, இழந்ததை மீண்டும் பெறச் செய்யும் ஒரே தெய்வம் முருகப் பெருமான் என்று ஐதீகம் கூறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தலம் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஊரின் பெயரே திருமுருகன் பூண்டி என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஸ்தலமூர்த்தி திருமுருக நாதேஸ்வரர்.
மூலவர் சுயம்பு சிவலிங்கமாக தோன்றியுள்ளார். இத்தலத்தில் முருகப் பெருமான், தனித்துவமான வடிவத்தில் காட்சி தருகிறார். அவர் கையில் வேல் இல்லாமல், அருகில் மயில் இல்லாமல் அருள்பாலிக்கிறார். இதற்கு காரணம், அவர் தன்னுடைய ஆயுதங்களையும் வாகனத்தையும் ஆலய வாசலில் விட்டு, சிவனை வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது.
கோபத்திற்கு பெயர் பெற்ற துர்வாச முனிவர், தனது கோபத்தால் பல பாவங்களில் சிக்கினார். அந்த பாவங்களை நீக்குவதற்காக இத்தலத்திற்கு வந்து சிவபெருமானையும் முருகப்பெருமானையும் வழிபட்டதாக ஐதீகம் கூறுகிறது. கோபம் காரணமாக இழப்புகளை சந்தித்தவர்கள், தங்கள் பிறந்த நட்சத்திர நாளில் வரும் செவ்வாய் ஓரை நேரத்தில் அல்லது செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஓரையில் வந்து வழிபடலாம்.
சிவனுக்கும் முருகனுக்கும் நெய் விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பு. மேலும், சுவாமியின் பெயரிலும் தங்களின் பெயரிலும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு மனமார வழிபடுபவர்கள், விரைவில் தங்கள் இழந்தவற்றை மீண்டும் பெற்று, கோபத்தின் விளைவாக ஏற்பட்ட துன்பங்களிலிருந்து விடுபடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
Read more: எச்சரிக்கை.. மூல நோய் உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது..!! மீறினால் ஆபத்து..!



