நேற்று ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி படையால் (IRGC) சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தைத் தொடர்ந்து காணாமல் போன அமெரிக்க விமானியைக் கண்டுபிடிப்பதில் அமெரிக்காவும் ஈரானும் காலக்கெடுவுக்குள் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இந்நிலையில், தேடுதல் பணியில் இணையுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஈரான், வெகுமதியும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
நேற்று தாக்ககப்பட்ட இரண்டு விமானங்களில் அமெரிக்காவின் எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் (F-15E Strike Eagle) விமானமும் அடங்கும் என்றும், ஒரு படை வீரர் மீட்கப்பட்டதாகவும், குறைந்தது ஒருவர் இன்னும் காணவில்லை என்றும் ஈரான் கூறியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா போர் 6-வது வாரத்தை எட்டி உள்ள நிலையில், ஈரானியப் பகுதியில் உறுதிசெய்யப்பட்ட முதல் அமெரிக்க விமான இழப்பு இதுவாகும். மேலும் இது இந்தப் போர் நடவடிக்கையில் ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும். சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் குறித்து வெள்ளை மாளிகையோ அல்லது பென்டகனோ எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவாலும் இஸ்ரேலாலும் தொடங்கப்பட்ட இந்த மோதல், மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர், உலகளாவிய சந்தைகள் சீர்குலைந்துள்ளன, முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் எரிபொருள் விலை உயர்ந்துள்ளன.
அமெரிக்கா “ஈரானைத் தோற்கடித்து முற்றிலுமாக அழித்துவிட்டது” என்றும், “இந்த வேலையை மிக விரைவாக முடிக்கும்” என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியிருந்தார்.. அவர் இந்த கருத்தை தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் சமீபத்தில் கூறியிருந்தன.
அமெரிக்க விமானியைத் தேடும் அமெரிக்காவின் தீவிர முயற்சி
காணாமல் போன F-15E விமானியைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கைகளை அமெரிக்க இராணுவம் தொடர்ந்துகொண்டிருக்கும் வேளையில், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையும் (IRGC) நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது. விரோதப் படைகள் எனக் கருதப்படும் படைகளைப் பிடிப்பவர்களுக்கும் அல்லது கொல்பவர்களுக்கும் பாராட்டும் வெகுமதியும் வழங்கப்படும் என அப்பகுதி ஆளுநர் அறிவித்துள்ளார்.
விமானச் சம்பவங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் குறைந்த அளவிலான விவரங்களையே வழங்கினர். அசோசியேட்டட் பிரஸ் பெற்ற ஒரு தகவல்தொடர்பில், மத்திய கிழக்கில் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்திருப்பதை பென்டகன் உறுதிப்படுத்தியது, ஆனால் அது குறித்து விரிவாகக் கூறவில்லை. ஒரு விமானப் பணியாளர் மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவரின் நிலை தெரியவில்லை.
இதனிடையே அதிபர் டிரம்ப், மீட்பு முயற்சிகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார், ஆனால் இந்தச் சம்பவம் ஈரானுடனான பேச்சுவார்த்தைகளைப் பாதிக்காது என்று கூறினார்.
ஈரானியப் படைகளால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ஏ-10 ரக விமானம் ஒன்று பாரசீக வளைகுடாவில் விழுந்து நொறுங்கியதாக ஈரானிய அரசு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், அந்த விமானம் தானாகவே விழுந்து நொறுங்கியதா அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டதா, அல்லது இதில் ஈரானுக்கு நேரடியாகத் தொடர்பு உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று ஒரு அமெரிக்க அதிகாரி கூறினார். விமானக் குழுவினர் மற்றும் சரியான இடம் குறித்த விவரங்கள் நிச்சயமற்றதாகவே இருந்தன.
பிடிபட்ட எந்தவொரு “எதிரி விமானியையும்” அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு ஈரானிய அரசு தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் பொதுமக்களை வலியுறுத்தினார். போர் முழுவதும், எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் பலமுறை கூறியிருந்தாலும், அவை பின்னர் சரிபார்க்கப்படவில்லை. இருப்பினும், ஒரு விமானியைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் கேட்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
மற்றொரு ஈரானிய அணுசக்தி தளம் மீது தாக்குதல்
சனிக்கிழமையன்று புஷேர் அணுசக்தி நிலையத்திற்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் ஒரு பாதுகாப்பு காவலர் கொல்லப்பட்டதாகவும், ஒரு துணை கட்டிடம் சேதமடைந்ததாகவும் ஈரானின் அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. போரின் போது அந்த தளத்தின் மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இது என்று அந்த நிறுவனம் சமூக ஊடகப் பதிவில் கூறியுள்ளது.
இன்றும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்தது. ஈரானிய ஆளில்லா விமானம் என சந்தேகிக்கப்படும் ஒன்று, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிளின் துபாய் தலைமையகத்தையும் சேதப்படுத்தியது.



