திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டி ஆரோக்கிய நகரைச் சேர்ந்தவர் ஜோஸ் மரிய ராகுல் (28). இவர் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் நட்பை வளர்த்துள்ளார். பெற்றோரை இழந்த அந்த மாணவி, தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றபோதும், “நாம் திருமணம் செய்து கொள்ளலாம்.. உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன்” என்று ராகுல் ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி, மாணவியை வைகை அணைப் பகுதிக்கு வரவழைத்த ராகுல், அங்குள்ள பூங்காவை சுற்றிப் பார்த்த பிறகு, மாணவியைக் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த கொடூரச் செயலுக்குப் பிறகு, அந்த மாணவியைத் நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர், நிர்வாண வீடியோவை காட்டி மிரட்டி, மாணவியை அடிக்கடி தனது பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தியதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் காதலில் மயங்கியிருந்த மாணவி, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ராகுலை வற்புறுத்தியுள்ளார். ஆனால், ராகுல் அதை காலம் தாழ்த்தித் தட்டிக் கழித்து வந்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த கல்லூரி மாணவி, ராகுலின் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது ராகுலின் பெற்றோர்களும் மாணவியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, சமூகத்தை காரணம் காட்டி, “உன்னை எங்கள் மருமகளாக ஏற்றுக்கொள்ள மாட்டோம்.. எங்கள் மகனுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்கப் போகிறோம்” என்று கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்த கல்லூரி மாணவி, தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு, திருமணத்திற்கு மறுத்த ஜோஸ் மரிய ராகுல் மற்றும் அவரது பெற்றோரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Read More : இரவு நேரத்தில் இந்த அறிகுறிகள் இருக்கா..? அப்படினா ரத்தக் குழாய் அடைப்பு தான்..!! உயிருக்கே ஆபத்து..!!