கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் அரசு பள்ளி ஒன்றில், தலைமை ஆசிரியை ஒருவர் பெண் ஊழியரை மசாஜ் செய்ய வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் யாத்ராமி பகுதியில் “கஸ்தூரி பாய் காந்தி உண்டு, உறைவிடப்பள்ளி” செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விஜயாஸ்ரீ பட்டீல் என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் பணியாற்றும் ஊழியர்களை மசாஜ் செய்யும்படி வேலை வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஜூலை 18ஆம் தேதி, பள்ளியில் உதவியாளராக பணிபுரியும் ஒரு பெண் ஊழியையை தனியாக அழைத்து, தோளில் மசாஜ் செய்யும்படி மிரட்டியுள்ளார்.
அந்த பெண் அதை மறுத்தபோதும், செய்யாவிட்டால் வேலை போய்விடும் என மிரட்டியுள்ளார். இதனால் வேறு வழியின்றி, தலைமை ஆசிரியையின் தோள்பட்டையை இருகைகளாலும் மசாஜ் செய்துள்ளார். இந்த சம்பவத்தை பள்ளியில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த வீடியோ மாணவர்கள் பெற்றோர் வாட்ஸ்-அப் குழுக்களிலும் பரவியுள்ளது.
வீடியோவை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர். “பள்ளி என்பது மாணவர்களுக்கு நற்பண்புகள் கற்றுக்கொடுக்க வேண்டிய இடம். இப்படியொரு தவறான நடத்தை எப்படி தலைமை ஆசிரியர் ஒருவர் மேற்கொள்கிறார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அதனைத்தொடர்ந்து பெற்றோர், தலைமை ஆசிரியை விஜயாஸ்ரீ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இல்லையெனில், பள்ளி முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.
Read more: தவெக-வில் இருந்து தாவிய வைஷ்ணவி.. விஜய் மற்றும் தொண்டர்கள் மீது பரபரப்பு புகார்..!!