பொதுவாக வேப்பமரம் என்பது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டதாகவே இருந்து வருகிறது. வேப்ப மரத்தில் உள்ள இலை, காய், பூ, பட்டை, வேர் என அனைத்துமே நோய்களை தீர்க்கும் மருந்தாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். இதில் வேப்பம்பூவை துவையலாக செய்து அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டனர். இந்த துவையலில் பல நோய்களை தீர்க்கும் மருத்துவ குணங்கள் இருந்துள்ளதாக முன்னோர்களால் நம்பப்பட்டு வந்தது.
தேவையான பொருட்கள்: வேப்பம் பூ – 1 கப், கடலை பருப்பு – 1/4 கப், உளுந்தம் பருப்பு -1 டேபிள் ஸ்பூன், மிளகாய் வத்தல் – 3, பெருங்காயம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு, தேங்காய் – துருவியது 1/4 கப்
செய்முறை: முதலில் ஒரு எண்ணெய் ஊற்றி கடாயில் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பருப்பு நன்றாக சிவந்ததும் மிளகாய் வத்தல் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே கடாயில் துருவிய தேங்காய் மற்றும் வேப்பம்பூ சேர்த்து நன்றாக சிவந்து வரும் வரை வதக்கி தனியாக எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.
இவை நன்றாக ஆறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்தையும் சேர்த்து பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பை சேர்த்து தாளித்து இந்த சட்னியில் சேர்த்தால் சுவையான, மருத்துவகுணம் வாய்ந்த வேப்பம்பூ சட்னி தயார்.