காலையில் எழுந்தவுடன் சூடாக ஒரு டம்ளர் காபி அருந்தியபடி, பேப்பர் படிப்பதும், பெட்காபி குடிப்பதும் நம்மில் பெரும்பாலானோரின் பழக்கம். இப்படி காபி சாப்பிடுவது நமக்கு சுறுசுறுப்பு தரும்; புத்துணர்ச்சி ஊட்டும் என்கிற நம்பிக்கையும் நிறையப் பேருக்கு இருக்கிறது. இப்படி வெறும் வயிற்றில் காபி குடிப்பது ஆரோக்கியமானதுதானா? என்றால் நிச்சயமாக இல்லை. அது நமக்குத் தரும் நன்மைகளைவிட, தீமைகளே அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
நம் வெறும் வயிற்றுக்குள் போகும் காபி என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?
நம் உடல், உணவை செரிமானம் செய்து உடலில் உள்ள சத்துக்களைப் பிரித்துக் கொடுத்து, இதயத்தைத் துடிக்கவைத்து, மூளையை சிந்திக்கவைத்து, நம்மைப் பேசவைத்து, சிரிக்கவைத்து, அழவைத்து… என அது நிகழ்த்துகிற அற்புதங்கள் ஏராளம். அதில் ஒரு சிறு உதாரணம், நமக்கு பிடித்த உணவைப் பற்றி நினைக்கும்போதே, நம் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தியாகத் தொடங்கிவிடும். அன்றைய தினம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் என நினைத்து நாம் அருந்தும் காபி, இந்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும் சுரக்கச் செய்யும். ஏற்கெனவே, இரவில் சாப்பிட்டுவிட்டு, உறங்கி நீண்ட நேரத்துக்கு வயிற்றைக் காயப் போட்டு வைத்திருப்போம். அந்த வெறும் வயிற்றில் காபி குடித்தால் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம், அதன் செயல்பாட்டைப் பாதிக்கும். வயிற்று உப்புசம், வாயுத்தொல்லை எல்லாவற்றையும் கொண்டுவந்துவிடும். பின்னாட்களில், இதுவே வயிறு தொடர்பான பல பெரிய நோய்களுக்கு காரணமாகலாம்.
அசிடிட்டி உள்ளவர்கள் கவனிக்க வேண்டியது..!
சிலருக்கு வயிற்றில் ஏற்கெனவே சில பிரச்னைகள் இருக்கும். அதாவது, அசிடிட்டி, அல்சர், அடிக்கடி மலம் கழிக்கத் தூண்டும் பிரச்னை ஆகியவை.
இப்படிப்பட்டவர்கள், காலையில் வெறும் வயிற்றில் காபியைக் கையால்கூடத் தொடக் கூடாது. காபி கொட்டையில் இருக்கும் காஃபின்’ என்கிற பொருளும் சில அமிலங்களும் சிறுகுடலைக் கடுமையாக பாதித்து, எரிச்சலை ஏற்படுத்திவிடும்.
வெறும் வயிற்றில் காபி குடித்தால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்!
வெறும் வயிற்றில் காபி, உயர் ரத்த அழுத்தம் ஏற்படவும் வழிவகுக்கும்’ என எச்சரிக்கிறார்கள் சில மருத்துவர்கள். உயர் ரத்த அழுத்தம் பற்றிச் சொல்லவே வேண்டாம். சர்க்கரைநோய், இதய நோய்கள் போன்ற மெகா வியாதிகளுக்கு ஆரம்பப்புள்ளியே உயர் ரத்த அழுத்தம்தான். எனவே, காலை காபியா... அதிலும் வெறும் வயிற்றில் காபியா?
நோ’ சொல்லிப் பழகுவோம். `
பிறகு, எப்போதான் காபி குடிக்கலாம் கொஞ்சம் சொல்லுங்களேன்!
ஆரோக்கியமான சிற்றுண்டிக்குப் பிறகு காலை 10:00 மணியில் இருந்து 11:30 மணி காபி அருந்த அருமையான நேரமாம். நம் வழக்கமான உடல் செயல்பாடுகளுக்கு ஊறு ஏதும் விளைவிக்காத அற்புதமான தருணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.