கொத்துக்கொத்தாய் மஞ்சள் வண்ணத்தில் பூத்துக்குலுங்கும் ஆவாரம் பூக்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் உடலுக்கு பல நன்மைகளை செய்யும் மூலிகையாக பயன்படுகிறது. ஆவாரம் பூக்களை பறித்து காயவைத்து, பின்பு சிறிது சுத்தமான நீரை அடுப்பில் வைத்து, அதில் நிழலில் உலர்த்தப்பட்ட்ட ஆவாரம் பூக்களை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பனங்கற்கண்டை சிறிதளவு சேர்த்தால் ஆவாரம் பூ தேநீர் தயார்.
இத்தேநீரை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். உடலுக்கும் பலத்தை கொடுக்கும். பனங்கற்கண்டு மற்றும் வேறு எந்த இனிப்புகளும் சேர்க்காமலும் இத்தேனீரை பருகலாம்.
ஆவாரம் பூ தேநீர் பருகுவதால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களும் நீங்கி, கல்லீரல் பலப்படும். மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும். ஆவாரம் பூக்களை வெயிலில் உலர்த்தி பொடி செய்து, இதனுடன் தேவையான அளவு மிளகு, ஏலக்காய், கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலையில் குடித்து வந்தால் உடல் எடை குறையும். நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

கல்லீரல் பிரச்சினை சரியாகும். குழந்தை இல்லாத பெண்கள் இதன் பூக்களை கருப்பட்டி உடன் சேர்த்து அரைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கருப்பை பிரச்சினை நீங்கும். ஆவாரம்பூக்களை தயிர் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி பொலிவுடன் காணப்படும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வெதுவெதுப்பான நீரில் பொடியை சேர்த்து தேனுடன் கலந்து மூலிகை தேநீராக்கி குடிக்கலாம். இது நல்ல மலமிளக்கியாக செயல்படும். ஆவாரம் பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலுக்கு தீர்வாகிறது. ஆவாரம் பூ பானம் சிறுநீர் கடுப்பு இருக்கும் போது அதை குறைக்க செய்கிறது. இதனுடைய வேரிலிருந்து தயாரிக்கப்படும் சாறு இயற்கை டையூரிடிக் ஆக செயல்பட்டு சிறுநீரகத்தை பாதுகாக்கிறது.