கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக்கணக்குக்கு ரூ.1,000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களின் நிலைகுறித்தகுறுஞ்செய்தி, விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. திட்டம் தொடர்பாக ஏதாவது சந்தேகங்கள் அல்லது பணம் வரவில்லை என்றால் தமிழக முதல்வரின் உதவி மைய எண் 1100-ஐ தொடர்பு கொண்டும் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம். அனைத்து இ-சேவை மையங்களிலும் தங்களின் விண்ணப்பத்தின் நிலைகுறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் kmut.tn.gov.in/login.html என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம். அதற்கு முதலில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர் ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை வைத்து என்ன காரணதிற்காக பணம் வரவில்லை என நீங்களே தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.65 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.