தற்போதைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகான குழந்தை பேற்றை தள்ளிப்போடும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக கருவுறுதலில் பல்வேறு சவால்களும் உருவாகி வருகின்றன.
தாமதமான திருமணம், சீரற்ற வாழ்வியல் பழக்கவழக்கங்களால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் மற்றும் திட்டமிட்டு கருவுறுதலை தள்ளிப்போடுவது போன்றவை இதன் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. எனினும், ஆரோக்கியமான உணவு முறை, மிதமான உடற்பயிற்சி மற்றும் உடல் எடையை சீராக பராமரிப்பது ஆகியவற்றின் மூலம் இந்த சவால்களை கடக்க முடியும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கணவன், மனைவி இருவரும் உரிய பரிசோதனைகளை செய்து கொண்டு, மருத்துவரின் ஆலோசனையோடு செயல்படுவது சிறந்தது என்றும் கூறுகின்றனர்.
இந்நிலையில், இயற்கையான முறையில் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்க உதவும் சில முக்கிய உணவுகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வால்நட், மீன்கள்:
வால்நட்டில் ஒமேகா 3 அமிலம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்துள்ளது. தினமும் 75 கிராம் வால்நட் சாப்பிடுவது விந்தணுக்களின் இயக்கத்தை அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல் சாலமன் போன்ற மீன்களில் உள்ள ஒமேகா 3 அமிலம் அழற்சியை குறைத்து விந்தணு செயல்பாட்டை உயர்த்துகிறது.
சிட்ரஸ் பழங்கள், பெர்ரிஸ்:
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி மற்றும் பாலிஅமின்ஸ் ஆண், பெண் இருவரின் இனப்பெருக்க மண்டலத்தை வலுப்படுத்துகிறது. ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் கருமுட்டை வளர்ச்சிக்கும் விந்தணு இயக்கத்திற்கும் பெரிதும் உதவுகின்றன.
தக்காளி, சியா விதைகள்:
தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை உயர்த்த உதவுகின்றன. சியா விதைகளில் உள்ள இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்றவை ஹார்மோன் சமநிலையை பாதுகாத்து, கருமுட்டை மற்றும் விந்தணுவின் தரத்தை மேம்படுத்துகின்றன.
மேலும், பருப்பு வகைகள், பீன்ஸ், கோதுமை போன்ற முழு தானியங்கள் மற்றும் சிறு தானியங்கள் உடலின் சர்க்கரை அளவை சீராக வைத்து கருவுறுதலுக்கு துணைபுரிகின்றன. கெட்டி தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களையும் அளவோடு உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Read More : “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா”..!! மதுரையில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்..!!



