லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “கூலி” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வந்தது. வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் கூலி திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னையிலுள்ள சத்யம் பிவிஆர் திரையரங்கில் நடைபெற்றது. சென்னை துறைமுகத்தில் பணியாற்றும் 100 சுமை தூக்கும் தொழிலாளர்களும், 50 வாசகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி, கூலி படத்தில் சொல்லப்பட்ட கதைக்கும், நிஜ வாழ்க்கையின் கடின உழைப்புக்கும் உள்ள தொடர்பை உணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டது.
கூலி படத்தை முன்வைத்து எடுத்த இந்த சமூக முயற்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. From Chennai Harbour to the Big Screen என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, ரீல் கதாபாத்திரங்களையும் ரியல் நாயகர்களையும் இணைக்கும் முயற்சியாக அமைந்தது. தினசரி உழைப்பால் வாழ்க்கையை நடத்தும் கூலிகள், அவர்களது உறுதியும் பொறுமையும் கூலி படத்தின் உள்ளடக்கத்துடன் ஒத்திருப்பதால், இந்த நிகழ்ச்சியில் விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர்.
வாசகர்களுக்காக நடத்தப்பட்ட ஓபன் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 வாசகர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஒன் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராவணன் கூறுகையில், “திரையில் சொல்லப்படும் கதைகளுக்கு மட்டுமல்ல, நிஜ வாழ்க்கைக் கதைகளுக்கும் சக்தி உண்டு. சென்னை துறைமுக கூலிகளையும், நமது வாசகர்களையும் கூலி படத்தின் திரையரங்கு நிகழ்ச்சியில் ஒன்றிணைத்து, காணப்படாத நாயகர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
திரையரங்கு கைத்தட்டலால் மட்டும் அல்லாது, நெகிழ்ச்சி, நன்றியுணர்வு மற்றும் கொண்டாட்ட உணர்ச்சியால் நிரம்பியது. முக்கிய காட்சிகளில் எழுந்த ஆரவாரம் முதல் அமைதியான சம்மதம் குறிக்கும் தலை அசைவுகள் வரை, சினிமாவுக்கும் அன்றாட வாழ்க்கை நாயகர்களுக்கும் இடையிலான ஆழமான உணர்ச்சி பிணைப்பை வெளிப்படுத்தியது. ஒரு சாதாரண திரைப்பட வெளியீட்டைத் தாண்டி, இது தனக்கே உரிய ஒரு கதையாக மாறியது. அதில் வெளி வந்தது திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமல்ல, சென்னை துறைமுகத்தின் தெரியாத நாயகன்களும் தான்.