திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே சில மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கிவிட்டது. படிப்படியாக அதிகனமழையாக மாறி வெளுத்து வாங்கப்போகின்றது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.