புயல் பாதிப்பு காரணமாக புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், சென்னைக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் நேற்று நிலை கொண்டிருந்தது. அப்போது புயலுக்கும், வடதமிழக கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 70 கி.மீ. ஆக இருந்தது. தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நகர்ந்த டிட்வா புயல், சென்னையில் இருந்து 140 கி.மீ. தொலைவில் வந்தபோது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. அப்போது வட தமிழக கரையை ஒட்டி 80 கி.மீ. தொலைவில் நிலவியது. இது தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்கிறது. இது இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலு குறைய வாய்ப்பு உள்ளது. அப்போது, வட தமிழக கரையை ஒட்டி 20 கி.மீ. தொலைவில் நிலவும்.
தமிழகம், புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 19 செ.மீ., மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் 17 செ.மீ., நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் 15 செ.மீ., திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 14 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், தொண்டி, நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளத்தில் 13 செ.மீ., கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, திருவாரூர் மாவட்டம் நன்னிலம், நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை, வேளாங்கண்ணி, வேதாரண்யத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் புயல் பாதிப்பு காரணமாக புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தமிழகத்திலும் நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனால், அங்கும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.



