விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தைச் சேர்ந்த கர்ணனின் மகன் மாரீஸ்வரன் (21). இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார். இவருக்கு சமீபத்தில் முகநூல் மூலம் அரியமங்கலத்தை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் இளங்கோவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் அடிக்கடி சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென மாரீஸ்வரன் ரயிலுக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாணவன் மரணம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், விடுதி அறையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசாருக்கு கடிதம் சிக்கியது. அதில், அரியமங்கலத்தைச் சேர்ந்த இளங்கோவன் மற்றும் அவரது நண்பர்கள் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும், அதை வீடியோ மற்றும் புகைப்படமாக பதிவு செய்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
வீடியோவை காட்டி மிரட்ட்டி அடிக்கடி பணம் பறித்ததோடு தங்கச் சங்கிலியையும் பறித்ததாக குறிப்பிட்டிருந்தது. மாணவர்களின் தொடர்ச்சியான மிரட்டல்களால் மனம் உடைந்த மாணவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். கடிதத்தில் அடிப்படையில் திருச்சி போலீசார் பாலிடெக்னிக் மாணவர் இளங்கோவன் (20) உட்பட அவரது நண்பர்கள் பாண்டீஸ்வரர், பவித்ரன், முத்துராஜா, ஆண்டனி, சஞ்சய் ஆகிய ஆறு பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.