இத்தாலியின் பிரெசியா பகுதியில் நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் செங்குத்தாக விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். இந்த பயங்கர விபத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு இத்தாலியின் பிரெசியா அருகே உள்ள A21 கோர்டமோல்-ஆஸ்பிடேல் நெடுஞ்சாலையில் இந்த பயங்கர சம்பவம் நடந்தது. இந்த விபத்தில் இரு பயணிகளும் உயிரிழந்தனர் மற்றும் சாலையில் இருந்த நான்கு பேர் காயமடைந்தனர். ரிபப்ளிக் வேர்ல்டின் கூற்றுப்படி, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் இறந்தவர்கள் வழக்கறிஞர் செர்ஜியோ ரவாக்லியா (75) மற்றும் அவரது மனைவி அன்னா மரியா டி ஸ்டெஃபனோ (55) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விமானம் மோதியதில் இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்தன, ஓட்டுநர்கள் காயமடைந்தனர்,
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த வாகனங்களில் தீயை அணைத்தனர். இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.