சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகள் சொத்து வரி மற்றும் குடிநீர் வரி நிர்ணயிக்கும் போது, கட்டிடத்தின் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விகிதங்களை தீர்மானித்து வருகின்றன. பொதுவாக ஒரு கட்டிடம் குடியிருப்பு நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறதா, அல்லது வாடகை வசூலித்து வருமானம் ஈட்டும் வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைப் பொறுத்தே அந்த கட்டிடத்திற்கு வரி விதிக்கப்படுகிறது.
அந்த வகையில், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கும் விடுதிகள் (ஹாஸ்டல்கள்) வாடகை மூலம் வருமானம் ஈட்டுவதால், இவை வணிக நோக்கத்திற்கான கட்டிடங்களாக மாநகராட்சிகள் கருதி, அதற்கேற்ற வணிக வரி விதித்து வந்தன. இந்த நடவடிக்கையின்படி, ஹாஸ்டல் கட்டிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.2.5 லட்சம் வரை சொத்து வரி மற்றும் குடிநீர் வரி விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை எதிர்த்து, பல பெண் விடுதி உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மாநகராட்சிகள் விடுதிகளை வணிக கட்டிடமாகக் கருதி வரி விதித்தது தவறு என்றும், இவை உண்மையில் மாணவர்களும் பணியாளர்களும் தங்கும் குடியிருப்பு வகை கட்டிடங்களே என்றும் மனுதாரர்கள் வாதிட்டனர். இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிந்ததும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: “விடுதிகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் 2023ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பின்படி, விடுதி என்பது மாணவர்கள், மாணவியர், வேலைக்கு செல்வோர் தூங்குவதற்கும் தங்குவதற்கும் மட்டுமே பயன்படுத்தும் இடமாகும். எனவே அது ‘குடியிருப்பு’ வகையில் தான் வருகிறது.
இதே அடிப்படையில் தற்போதைய வழக்கிலும் முடிவு எடுக்கப்படுகிறது. வீடுகளுக்கு எவ்வாறு சொத்து வரி, குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அதே அளவிலேயே விடுதிகளுக்கும் வசூலிக்க வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் எந்த நோட்டீசும் கொடுக்காமல், விடுதிகளை வணிக கட்டிடங்களாகக் கருதி வரி விதித்தது இயற்கை நீதிக்கு எதிரானது.” என்றார்.
இதனையடுத்து, நீதிபதி மாநகராட்சி அதிகாரிகள் பிறப்பித்த வணிக வரி உத்தரவுகளை ரத்து செய்து, விடுதிகளை குடியிருப்பு கட்டிடங்களாகக் கருதி வரி விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு, மாணவர்கள் மற்றும் பணிபுரியும் இளைஞர்களுக்கான விடுதிகளை நடத்தி வரும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான உரிமையாளர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: சிம்ம ராசியில் கேது – சந்திரன்.. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்..



