இந்தியாவில் பயணிகளின் போக்குவரத்து தேவையை பெரிதும் தீர்த்து வைப்பது ரயில்வே துறைதான். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் லட்சக்கணக்கான மக்கள் தினசரி பயணம் செய்து வருகிறார்கள். குறிப்பாக அவசர காலங்களில் பயணிகள் ரயிலை நிறுத்துவதற்காக ஒவ்வொரு ரயிலிலும் எமர்ஜென்சி சங்கிலி கொடுக்கப்பட்டு இருக்கும்.
அதில், “அதை இழுக்காதே, அபராதம் விதிக்கப்படும்” என்ற எச்சரிக்கையும் இடம் பெற்றிருக்கும். ஆனால் ஒரு சிறிய சங்கிலியை இழுத்தவுடனே, ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள ரயில் எப்படி நிற்கிறது என்று என்றாவது நினைத்திருக்கீங்களா? இதன் பின்னுள்ள அறிவியல் தொழில்நுட்பம் மிகவும் சுவாரஸ்யமானது.
இந்திய ரயில்களில், ‘ஏர் பிரேக் சிஸ்டம்’ எனப்படும் முறையே பயன்படுத்தப்படுகிறது. ரயிலின் எஞ்சினிலிருந்து கடைசி பெட்டிவரை பிரேக் பைப் எனப்படும் நீண்ட குழாய் ஓடிக்கொண்டிருக்கும். இந்தக் குழாயில், அதிக அழுத்தத்தில் காற்று பாய்ந்து கொண்டிருக்கும். சாதாரண நிலையில் குழாயில் உள்ள காற்று அழுத்தம், சக்கரங்களில் இருக்கும் பிரேக் ஷூக்களை பின்னால் தள்ளி வைக்கும். இதனால் ரயில் சீராக இயங்கும்.
சங்கிலி இழுக்கும்போது பிரேக் பைப்புடன் இணைக்கப்பட்ட வால்வு திறக்கப்பட்டு, குழாயில் உள்ள காற்று வேகமாக வெளியேறும். அப்போது அழுத்தம் குறைந்து பிரேக் சிஸ்டம் தானாக செயல்பட்டு, பிரேக் ஷூக்கள் சக்கரங்களை இறுக்கப் பிடிக்கும். இதனால் ரயில் மெதுவாக நிற்கும்.
சங்கிலி இழுக்கப்பட்டவுடன், லோகோ பைலட்டின் கேபினில் அலாரம் ஒலிக்கும் அல்லது சிக்னல் விளக்கு எரியும். புதிய ரயில்களில், எந்த பெட்டியில் சங்கிலி இழுக்கப்பட்டது என்பதும் கட்டுப்பாட்டு பலகையில் தெளிவாகக் காட்டப்படும். ரயில் நின்றவுடன், பாதுகாப்பு பணியாளர்கள் சம்பவ இடத்தைச் சரிபார்ப்பார்கள்.
எப்போது பயன்படுத்தலாம்? இந்த அவசரச் சங்கிலி மிகவும் அவசியமான சூழ்நிலைகளில் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக மருத்துவ அவசரம், தீ விபத்து, கொள்ளை முயற்சி அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல், பயணியின் உடல்நலம் ஆபத்தில் இருப்பது போன்ற சமயத்தில் பயன்படுத்தலாம். சரியான காரணமின்றி சங்கிலி இழுப்பது ரயில்வே சட்டத்தின் கீழ் குற்றமாகும். இது அபராதம் அல்லது சிறைத்தண்டனைக்குக் காரணமாகும்.
Read more: காலையில் தூங்கி எழுந்தவுடன் பல் துலக்காதீங்க..!! இதை முதலில் பண்ணுங்க..!! ஏன் தெரியுமா..?