பெண்களுக்கு ஆண்களை ஈர்ப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்து கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டியதாக கூறப்படும், “செக்ஸுவல் இன்டெலிஜென்ஸின் காட்மதர்” (Godmother of Sexual Intelligence) என்ற பெயரில் அறியப்படும் பிரபல இன்ஃப்ளூயன்சர் ஷோ யுவான் மீது சீன அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர்.
ஹுனான் மாகாணத்தின் சாங்ஷா நகரில் உள்ள சந்தை ஒழுங்குமுறை துறை, பொது பாதுகாப்பு மற்றும் கலாச்சார அதிகாரிகளுடன் இணைந்து, ஷோ யுவான் வணிக செயல்பாடுகளை ஆய்வு செய்யும் சிறப்பு குழுவை அமைத்ததாக கடந்த மாதம் அறிவித்தது.
இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, ஷோ யுவானின் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், அவரது ஆன்லைன் பாடநெறிகள் அகற்றப்பட்டன. பெண்களை பொருளாக பார்க்கும் வகையிலும் “தவறான மதிப்பீடுகளை” ஊக்குவிக்கும் வகையிலும் அவரது உள்ளடக்கம் இருப்பதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..
ஷோ யுவானின் வணிக முறை
முன்னாள் வங்கி அதிகாரியான ஷோ யுவான், “பிளாக் அண்ட் வைட் செக்ஸுவல் இன்டெலிஜென்ஸ் ஸ்கூல்” என்ற அமைப்பை தொடங்கினார். திருமண வாழ்க்கையை புதுப்பிப்பது, பெண்களின் கவர்ச்சியை அதிகரிப்பது போன்ற நோக்கங்களுடன் பாடநெறிகளை அவர் விளம்பரப்படுத்தினார்.
குறிப்பிட்ட “கவர்ச்சி” (seduction) முறைகளை கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர் வைரலானார். அதில் “X” வடிவ உடல் நிலை, நீண்ட நேரம் தீவிரமாக கண்களில் பார்ப்பது போன்ற நுட்பங்களும் அடங்கும். ஆன்லைன் பாடங்கள், நேரடி பயிற்சி முகாம்கள், மற்றும் பெரியவர்களுக்கான பொருட்களின் விற்பனை உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மூலம், அவர் மொத்தமாக 2.4 கோடி யுவானுக்கு மேல் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.31 கோடி) வருமானம் ஈட்டியதாக தகவல்கள் கூறுகின்றன.
ஒரு வீடியோவில், கண் தொடர்பு நுட்பத்தை விளக்கும் ஷோ யுவான் “உங்கள் கண்களாலும் உடலாலும் ‘X’ வடிவத்தை உருவாக்குங்கள்” என்று பெண்களுக்கு அறிவுறுத்துகிறார். மேலும், கவர்ச்சியான சொற்றொடர்கள், உடல் அசைவுகள், உடை அணிவதற்கான குறிப்புகள் ஆகியவற்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
மற்றொரு வீடியோவில், மென்மையான குரலை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்குகிறார். “உங்கள் குரலை மென்மையாக்கி, ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் சற்றே உயர்த்திப் பேசுங்கள்” என்று கூறி (கணவர்/துணை) மீது பாராட்டு சொல்ல ஊக்குவிக்கிறார்.
நேரடி பயிற்சி முகாம்கள்
ஷோ யுவான் ஆன்லைன் பாடநெறிகளுக்கு அப்பாற்பட்டு, நேரடி பயிற்சி நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். கடந்த ஆண்டு சியாமென் நகரில் நடைபெற்ற இரண்டு நாள் “செக்ஸி ரெவலேஷன்” முகாமில், அவர் “உடல் இன்பத்தின் அறிவியல்” என விவரித்த விஷயங்களைப் பற்றி பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார்.
பாலியல் அறிவு தொடர்பான சொற்பொழிவுகளும் இதில் இடம்பெற்றன. திருமண வாழ்க்கையை மீண்டும் உற்சாகப்படுத்த விரும்பிய பல திறமைமிக்க பெண்கள் இதில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
கடும் விமர்சனங்கள்
இத்தகைய செயல்பாடுகள் காரணமாக ஷோ யுவானுக்கு கடும் விமர்சனங்களும் எழுந்தன. சிலர், அவர் ஆபாச வகுப்புகளை நடத்துகிறார் என்றும், பெண்களை ஆண்களுக்கு தாழ்ந்து நடக்க கற்றுக்கொடுக்கிறார் என்றும் குற்றம் சாட்டினர். மற்றவர்கள், அவரது உள்ளடக்கம் பாலியல் சுட்டிக்காட்டல்களால் நிரம்பியதாகவும், பெண்கள் அதிகாரமளிப்பு என்பதை சில கணக்கிட்ட நுட்பங்களாக மட்டுமே சுருக்கிவிடுவதாகவும் விமர்சித்தனர்.
இதற்கு பதிலளித்த ஷோ யுவான் தனது பாடநெறிகள் பெண்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கவும், உறவுகளில் தாங்களே கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளவும் உதவுவதற்காக உருவாக்கப்பட்டவை என்று விளக்கம் அளித்தார்.
சீனாவில் “காதல் குருக்கள்” மீது கண்காணிப்பு
ஷோ யுவான், தற்போது சீனாவில் அதிகரித்து வரும் “உறவு வழிகாட்டிகள்” (relationship mentors) என்ற போக்கின் ஒரு பகுதியாக உள்ளார். இத்தகைய இன்ஃப்ளூயன்சர்கள் மீது அரசு தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற மற்றொரு பிரபல இன்ஃப்ளூயன்சர் க்யூ க்யூ (Qu Qu). பெண்களுக்கு “பணக்காரரை திருமணம் செய்யுங்கள்” என்று அறிவுரை வழங்கிய இவர், பரிமாற்ற அடிப்படையிலான உறவுக் கருத்துக்களை ஊக்குவித்ததாக 2023 இறுதியில் Weibo தளத்தில் இருந்து தடை செய்யப்பட்டார். 2025 ஏப்ரலில், வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் அவருக்கு 75.8 லட்சம் யுவான் அபராதம் விதிக்கப்பட்டது.
க்யூவின் ஆலோசனைகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தின. உறவுகள் மற்றும் திருமணத்தை நிதி லாபத்திற்கான வழியாகவே அவர் பார்த்ததாகவும், பெண்களையும் அதேபோல் நடக்க ஊக்குவித்ததாகவும் பலர் குற்றம் சாட்டினர்.



