நீங்கள் வாங்கும் சொத்து அல்லது உங்கள் பெயரில் உள்ள சொத்துக்களுக்கு பட்டா எப்படி வாங்குவது என்பதை பார்க்கலாம்.
நில பட்டா வாங்க, முதலில் உங்கள் சொத்து எந்தத் தாலுகா அலுவலக எல்லைக்குள் வருகிறதோ அங்குள்ள தாசில்தார் அலுவலகத்தை அணுக வேண்டும். பின்னர், இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பது அல்லது நேரில் சென்று விண்ணப்பிப்பது என இரண்டு வழிகளில் பட்டாவிற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க, தமிழ்நாடு அரசின் மின்-சேவைகள் இணையதளமான eservices.tn.gov.in சென்று, தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் பட்டா வாங்கும் முறை:
முதலில் தமிழ்நாடு அரசின் மின்-சேவைகள் இணையதளமான eservices.tn.gov.in வலைத்தளத்திற்குச் செல்லவும். பின்னர் அங்குள்ள ‘பட்டா’ அல்லது ‘வருவாய் சேவைகள்’ போன்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு நிலத்தின் விவரங்கள், சொத்து அமைந்துள்ள மாவட்டம், வட்டம், கிராமம், புல எண், உட்பிரிவு எண் போன்ற தகவல்களை உள்ளிட்டு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும். தேவையான ஆவணங்களை (பத்திரப்பதிவு ஆவணம் போன்றவை) பதிவேற்றம் செய்யவும். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு உங்களுக்கு ஒரு விண்ணப்ப எண் வழங்கப்படும். அதன் மூலம் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை கண்காணிக்கலாம்.
நேரில் விண்ணப்பிக்கும் முறை : உங்கள் சொத்து அமைந்துள்ள தாலுகா அலுவலகத்திற்கு நேரில் செல்லவும்.பட்டா பதிவு மாற்றம் செய்ய விண்ணப்பப் படிவத்தை பெற்று, சரியாக பூர்த்தி செய்யவும். தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.