மனித மூளை, மண்டை ஓட்டின் வழியாக மங்கலான ஒளிக்கதிர்களை (Ultraweak Photon Emissions – UPEs) வெளியிடுகிறது என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். ஐ சயின்ஸ் (iScience) இதழில் வெளியான இந்த புதிய ஆய்வின் மூலம், மனதின் செயல்பாடுகளுக்கேற்ப மாறும் ஒளி சமிக்ஞைகள் மூளையின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க உதவக்கூடியவை எனத் தெரியவந்துள்ளது.
“ஃபோட்டோஎன்செபலோகிராபி” எனப்படும் புதிய நுட்பம், எவ்வித ஊடுருவலும் இல்லாமல் மூளையின் இயல்பான ஒளி உமிழ்வுகளைப் பதிவு செய்யும் தொழில்நுட்பமாகும். இதில், UPE என அழைக்கப்படும் ஒளிக் கதிர்கள், செல்களுக்குள் நடைபெறும் இயற்கையான வளர்சிதை மாற்றத்தின் ஒரு பக்கவிளைவாக உருவாகின்றன.
மின்மினிப் பூச்சிகள் போன்ற உயிரினங்களில் காணப்படும் பயோலுமினென்சென்ஸுடன் ஒப்பிடுகையில், இந்த ஒளி மிகமிக மங்கலானது. பார்வைக்கு தெரிவதில்லை என்றாலும், புதிய தொழில்நுட்ப கருவிகள் மூலம் இதை பதிவு செய்ய முடிகிறது.
டஃப்ட்ஸ் பல்கலைக்கழகம், அல்கோமா பல்கலைக்கழகம் மற்றும் வில்ஃப்ரிட் லாரியர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில், முழு இருளில் 20 ஆரோக்கியமானோரின் மூளையை ஒளி உணர்திறன் கொண்ட சென்சார்கள் மற்றும் EEG கருவிகளின் மூலம் கண்காணித்தனர்.
பங்கேற்பாளர்கள் கண்களை மூடுவதும், ஒலிகளை கேட்பதும் போன்ற எளிய பணிகளைச் செய்தபோது, அவர்களின் மூளையில் இருந்து ஒளிக் கதிர்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பதை விஞ்ஞானிகள் பதிவு செய்தனர். இந்த ஒளிக்கதிர்கள் காட்சி மற்றும் ஒலி செயலாக்கப் பகுதிகளில் அதிகம் காணப்பட்டதாகவும், மனநிலைக்கு ஏற்ப மாறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த UPE ஒளிக்கதிர்கள் மூளையின் ஆரோக்கியத்தையும் செயல்பாடுகளையும் முன்கூட்டியே கணிக்க உதவக்கூடியவை என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இது அல்சைமர், பார்கின்சன் போன்ற நரம்பியல் கோளாறுகளைப் பற்றி ஆரம்ப கட்டத்திலேயே அறிந்துகொள்ள வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.