ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான கீர்த்தி மீனா, 4 ஆண்டுகளுக்கு முன் திருப்பூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இவர்கள் திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் சிவசக்தி நகரில் வசித்து வந்தனர். இந்த சூழலில் சிவக்குமாருக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சமீபத்தில், கீர்த்தி மீனா இது குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது, சிவக்குமார் வேறு ஒரு பெண்ணுடன் தனிமையில் இருந்த வீடியோவை கீர்த்தி மீனாவின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கணவரின் இந்தச் செயலால் மனமுடைந்து போன கீர்த்தி மீனா, வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த வீரபாண்டி காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து கீர்த்தி மீனாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி 7 ஆண்டுகள் கூட முடியாததால், இந்த தற்கொலை சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் (RDO) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிவக்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.