திருவண்ணாமலை மாவட்டம் சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கவுரி, செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். இவருடைய கணவன் வெங்கடேசன். இவர்களுக்கு கிஷோர் (5), தேவேஷ் (4) என்ற 2 மகன்கள் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் வெங்கடேசன் மதுகுடிக்கும் பழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகிறது. இதனால் தினமும் குடித்துவிட்டு மது போதையில் அவர் வீட்டிற்கு வருவாராம்.
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த கவுரி தனது 2 குழந்தைகளுடன் நேற்று அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் சென்னசமுத்திரம் பகுதியில் உள்ள கிணற்றில் குழந்தைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு கவுரி மற்றும் அவரது இரண்டு மகன்கள் உள்பட 3 பேரின் உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



