சீனாவில் ஜியாமென் நகரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட வினோதமான மருத்துவ நிலை தற்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. காதலன் உட்பட ஆண்களின் குரல் மட்டும் கேட்காமல் போனதால் ஏற்பட்ட இந்த அனுபவம் சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலை தலைகீழ் சரிவு செவித்திறன் இழப்பு என அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பால் குறைந்த அதிர்வெண் (low frequency) கொண்ட ஒலிகளை கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. பொதுவாக ஆண்களின் குரல் இந்த குறைந்த அதிர்வெண் வரம்பில் இருப்பதால், அவர்களின் குரல் மட்டும் கேட்காமல் போகும் நிலை உருவாகிறது.
இந்த பெண் ஒரு நாள் காலை தூங்கி எழுந்தபோது தனது காதலன் பேசுவது கேட்கவில்லை என்பதை முதலில் கவனித்துள்ளார். பின்னர் பரிசோதனையில் ஆண்களின் குரல் மற்றும் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகள் அனைத்தும் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால் பெண்களின் குரல் மற்றும் உயர்ந்த அதிர்வெண் ஒலிகள் தெளிவாக கேட்க முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் பயன்படுத்தும் ஆடியோகிராம் பரிசோதனையில், சாதாரண காது கேளாமையில் உயர் அதிர்வெண் ஒலிகள் முதலில் பாதிக்கப்படும். ஆனால் இந்த அரிய வகை பாதிப்பில் அதற்கு மாறாக குறைந்த அதிர்வெண் ஒலிகள் முதலில் பாதிக்கப்படுகின்றன. இதனால் இதனை “ரிவர்ஸ் ஸ்லோப்” என அழைக்கப்படுகிறது.
இந்த நிலை வெறும் ஆண்களின் குரலுக்கு மட்டுமல்லாது, குறைந்த அதிர்வெண் கொண்ட பல ஒலிகளையும் பாதிக்கும். இடியொலி, சில இசைக்கருவிகளின் பேஸ் ஒலி போன்றவையும் தெளிவாக கேட்காமல் போகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பாதிப்பு ஆரம்பத்தில் கண்டறிவது மிகவும் கடினம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மெதுவாக உருவாகும் மாற்றம் என்பதால் பலர் நீண்ட நாட்கள் வரை இதை கவனிக்காமல் விட வாய்ப்பு உள்ளது.
இந்த நோய் பெரும்பாலும் மெனியர் நோய், வைரஸ் தொற்றுகள், உடலின் திரவ அழுத்த மாற்றங்கள் அல்லது நரம்பியல் அழுத்த காரணங்களால் ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். சிலருக்கு சரியான சிகிச்சை இல்லையெனில், கேட்கும் திறன் நிரந்தரமாக பாதிக்கப்பட வாய்ப்பும் உள்ளது. தற்போது இந்த பெண் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், தேவையான சிகிச்சை மற்றும் ஹியரிங் எய்ட் உதவியுடன் நிலை மேம்படுத்த முயற்சி நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



