சென்னையில் திமுக இளைஞர் அணி சார்பில் “திமுக 75 அறிவு திருவிழா” என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதலமைச்சரும், திமுக இளைஞர் அணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், “திமுக கொள்கை கூட்டம் என்பது தெரிந்ததால் தான் புதிது புதிதாக நம்மை அழிக்க வந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பாசிச கூட்டம், நமது கொள்கை கூட்டத்தில் கைவைக்க பார்க்கிறார்கள்.
தமிழ் மொழி, இனம் காப்பாற்றப்பட வேண்டும். இதுதான் திமுகவின் கொள்கை. இந்தக் கொள்கைக்கு யாரெல்லாம் எதிரியாக உள்ளார்களோ அவர்கள் திமுகவுக்கும் எதிரி தான். திமுகவின் அடித்தளம் தியாகமும் கொள்கையும் தான். சிலர் அரசியலில் அடித்தளம் இல்லாமல் தற்காலிக புகழ் தேடுகிறார்கள்.
எமர்ஜன்சியை பார்த்த இயக்கம் திமுக. நம்மை கொள்கை வழி நடத்தி சென்று கொண்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை பயம் வழிநடத்திக் கொண்டு செல்கிறது. நாம் அறிவுத் திருவிழாவை நடத்தியுள்ளோம். அதிமுக அடிமைத் திருவிழா என்று வேண்டுமானால் நடத்த முடியும்.
கடைந்து எடுத்த அடிமை என்று ஒருவரை சொல்ல வேண்டுமென்றால் அது எடப்பாடி பழனிச்சாமியை சொல்லலாம். அதிமுக என்ற போர்வையை போற்றிக் கொண்டு பாசிச பாஜக தமிழ்நாட்டில் ஊடுருவ பார்க்கிறது. தமிழ்நாட்டில் SIR மூலம் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை நீக்க முயற்சிக்கிறார்கள்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி அடைய வேண்டும். ஏழாவது முறையாக திமுக ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும். நம்முடைய முதலமைச்சர் மீண்டும் முதலமைச்சர் ஆகப் பொறுப்பேற்க வேண்டும். திமுக இளைஞர் அணி பங்கு நிச்சயமாக நாம் கொடுக்க வேண்டும் நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று கூறினார்.



