மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், மதவெறி அரசியலைத் தூண்டி கலவரத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது எனக் கூறி, பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகளை கடுமையாகக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய திருமாவளவன், ““திருப்பரங்குன்றத்தைப் பற்றிப் பேச இந்த மண்ணின் மைந்தன் என்ற தகுதி எனக்குப் போதும். நான் முருகனைத் தரிசித்துவிட்டு வரும்போது பூசிய திருநீற்றை வைத்து அரசியல் செய்தார்கள். நான் பூசியது அவர்களுக்குப் பிரச்சனை இல்லை; அதை அழித்ததுதான் அவர்களுக்குப் பிரச்சனை,” என்றார்.
மேலும், “அண்ணாமலையும், நயினார் நாகேந்திரனும் இந்துக்களின் உண்மையான துரோகிகள். அவர்கள் கட்டமைக்க விரும்புவது இந்து ராஷ்டிரம் அல்ல; பார்ப்பன ராஷ்டிரம். தமிழ் கடவுள் முருகனை ‘சுப்பிரமணியன்’ என்று பெயர் மாற்றி பார்ப்பனர்களுக்குத் தொண்டு செய்பவனாகச் சித்தரிக்கிறார்கள். முருகன் என்ற பெயரைச் சொல்லவே எச்.ராஜாவுக்கு தகுதியில்லை,” என கடுமையாக விமர்சித்தார்.
“ஒடுக்கப்பட்ட மக்களின் கொடுமைகளுக்காக பாஜக, ஆர்எஸ்எஸ் அல்லது இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றாவது ஒரு நாள் போராடிய சான்று இருக்கிறதா?” என கேள்வி எழுப்பிய திருமாவளவன், “உயர்கல்வியில் இன்று இந்துக்கள் எத்தனை பேர் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள்? தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்த அளவிற்கு, பாஜக ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா?” என்றும் சாடினார்.
தமிழ்நாட்டு அரசியல் குறித்துப் பேசிய அவர், “தமிழ்நாட்டு மக்கள் இருவரை அடையாளம் கண்டு விட்டார்கள் ஒருவர் விஜய், இன்னொருவர் சீமான். சீமானும் விஜய்யும் ஆர்எஸ்எஸ்–பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது இன்று அம்பலமாகிவிட்டது. ஒருவர் திமுகவை வீழ்த்தவே கட்சி தொடங்கியுள்ளார்; மற்றொருவர் ‘பிராமண கடப்பாரை கொண்டு பெரியாரை இடிப்பேன்’ என்கிறார்,” என விமர்சனம் செய்தார்.
மேலும், “திமுக ஒரு தீய சக்தி என்பதுதான் விஜய்யின் ஒரே நோக்கம் என்றால், அவர் தமிழக மக்களுக்காக அல்ல; ஆர்எஸ்எஸ்-க்காகக் கட்சி தொடங்கியவர். அரசியல் அறியாமையில் விஜய் பேசுகிறார்,” என்றார். தனது அரசியல் நிலைப்பாடு குறித்து, “எங்களுக்குச் சீட் முக்கியமில்லை; கொள்கைதான் முக்கியம். பாமகவின் ஒரு பிரிவு திமுக கூட்டணிக்கு வந்தாலும் நாங்கள் ஏற்க மாட்டோம். சனாதனத்தை எதிர்க்கவே திமுகவுடன் நிற்கிறோம். நாளையே திமுக என்னை தூக்கிப் போட்டாலும் கவலையில்லை,” எனத் தெரிவித்தார்.



