தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று இரவு 7 மணிக்குமேல் நடைபெற்ற பிரசாரத்தின் போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த பரிதாபகரமான சம்பவத்தில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் செய்தி தமிழகமெங்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, கரூரில் கூட்ட நெரிசலில் பலியானோரின் உடல்களுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், உயிரிழந்தோரின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், மக்களை சந்திப்பது அனைத்து தலைவர்களுக்கும் இருக்கும் உரிமை. அதை யாராலும் தடுக்க முடியாது. காவல்துறையை கடந்து தவெக தலைவரும் தன் தொண்டர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை கொடுத்திருக்க வேண்டும். ஒவ்வொரு கூட்டத்திற்கும் செல்ல விஜய் எவ்வளவு தாமதம் செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தவெக கூட்டத்திற்கு விஜய் சரியான நேரத்தில் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் கூட்டத்திற்கு தாமதமாக செல்கிறார் என்ற குற்றசாட்டை முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாக நிற்கிறோம். ஈடு செய்ய முடியாத இழப்பு இது. இதற்கு மேல் இழப்புகள் ஏற்படக்கூடாது என மருத்துவர்களிடம் கூறியுள்ளோம். அருணா ஜெகதீசன் மதியம் 1 மணி அளவில் விசாரணையை தொடங்க இருக்கிறார். விபத்து நடந்த இடத்துக்கும் அவர் செல்ல இருக்கிறார். அவர் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.
Read more: இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்..? பிரபல ஜோதிடர் ராஜ்வீர் படேல் கணிப்பு..!