இந்த உத்தரவாதங்கள் கிடைத்தால், நேட்டோவில் சேரும் முயற்சியைக் கைவிட உக்ரைன் தயார்; ஜெலென்ஸ்கி அறிவிப்பு..

Zelensky 11zon

மேற்கத்திய நாடுகளிடமிருந்து வலுவான, சட்டபூர்வமான பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிடைத்தால், நேட்டோ (NATO) அமைப்பில் சேர வேண்டும் என்ற நீண்டகால இலக்கை கைவிடத் தயார் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதர்கள் மற்றும் ஐரோப்பிய கூட்டாளர்களுடன் பெர்லினில் நடைபெறவுள்ள முக்கிய சந்திப்புகளுக்கு முன்பாக அவர் கூறிய இந்த கருத்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..


பல ஆண்டுகளாக, ரஷ்யாவின் எதிர்கால தாக்குதல்களைத் தடுக்கும் மிக வலுவான பாதுகாப்பு கவசமாக நேட்டோ அமைப்பில் சேர வேண்டும் என்பதை உக்ரைன் முன்வைத்து வந்தது. இந்த நிலையில், ஜெலென்ஸ்கியின் இந்த அறிவிப்பு, கீவ் தரப்பிலிருந்து ஒரு பெரிய சமரசமாக பார்க்கப்படுகிறது.

நேட்டோ உறுப்பினர் பதிலாக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிற நட்பு நாடுகள் வழங்கும் சட்டபூர்வமாக கட்டுப்படுத்தப்படும் பாதுகாப்பு உத்தரவாதங்களை உக்ரைன் ஏற்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த செலென்ஸ்கி, “தொடக்கத்திலிருந்தே உக்ரைன் நேட்டோவில் சேர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். அதுவே உண்மையான பாதுகாப்பு உத்தரவாதம். ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சில கூட்டாளிகள் இந்த பாதையை ஆதரிக்கவில்லை,” என்று கூறினார்.

அதே நேரத்தில், மாற்று ஏற்பாடுகளும் வலுவான பாதுகாப்பை வழங்க முடியும் என அவர் வலியுறுத்தினார். “இன்று, உக்ரைன்–அமெரிக்கா இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உத்தரவாதங்கள், அமெரிக்கா வழங்கும் ஆர்ட்டிக்கல் 5 போன்ற உத்தரவாதங்கள், மேலும் ஐரோப்பிய கூட்டாளிகள் மற்றும் கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் வழங்கும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் – இவை அனைத்தும், ரஷ்யா மீண்டும் உக்ரைனை தாக்குவதைத் தடுக்கும் வாய்ப்பாக இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.

இந்த பாதுகாப்பு உத்தரவாதங்கள் சட்டரீதியாக கட்டாயமானவையாக இருக்க வேண்டும் என்றும், இது ஏற்கனவே எங்களின் தரப்பிலிருந்து செய்யப்பட்ட ஒரு சமரசம் என்றும் ஜெலென்ஸ்கி தெளிவுபடுத்தினார்.

இந்த மாற்றத்தை உக்ரைன் நடைமுறைப்படுத்தினால், அது கீவின் நிலைப்பாட்டில் ஒரு மிகப் பெரிய மாற்றமாக இருக்கும். ஏனெனில், ரஷ்யா நேட்டோ அமைப்பு விரிவடைவதை தன் பாதுகாப்புக்கு நேரடியான அச்சுறுத்தலாக கருதினாலும், உக்ரைன் தொடர்ந்து நேட்டோ உறுப்பினராக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்துள்ளது. இந்த மாற்றம், ரஷ்யா போர் குறித்து கூறி வரும் ஒரு முக்கிய இலக்குடன் ஒத்துப்போகும் நிலையை உருவாக்கினாலும், உக்ரைன் எந்தப் பகுதியையும் கைவிடத் தயாரில்லை என்று அதிபர் ஜெலென்ஸ்கி தெளிவுபடுத்தியுள்ளார்..

மேலும் “மரியாதைமிக்க அமைதி” என்றும், ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தாது என்பதற்கான உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்கள் அவசியம் என்றும் கூறினார். மேலும், உக்ரைன் நகரங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதன் மூலம், ரஷ்யா திட்டமிட்டே போரை நீட்டித்து வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். இந்தப் போர், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிகக் கொடிய போராக மாறக்கூடும் என்றும்..” அவர் எச்சரித்தார்.

இந்நிலையில், தூதரக முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, போர் முடிவுக்கு வரவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிக அழுத்தம் கொடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்கொஃப் மற்றும் அவரது மருமகன் ஜேரெட் குஷ்னர் ஞாயிற்றுக்கிழமை பெர்லினுக்கு வந்து, உக்ரைன் மற்றும் ஐரோப்பிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முன்னதாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இரு தரப்புடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட அனுபவம் கொண்ட விட்கொஃபை அனுப்பியிருப்பது, இந்த விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று வாஷிங்டன் நம்புகிறது என்பதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது..

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் சேர்ந்து, போர்நிறுத்தத்துக்கான வாய்ப்பை உருவாக்கக்கூடிய 20 அம்சத் திட்டத்தை உக்ரைன் பரிசீலித்து வருவதாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார். ஆனால், ரஷ்யாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய போர்முனை வரிகளின் அடிப்படையில் ஒரு தற்காலிக அமைதி நியாயமானதாக இருக்கலாம் என்றாலும், உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள டோனெஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் இருந்து உக்ரைன் படைகள் விலக வேண்டும் என்று மாஸ்கோ தொடர்ந்து கோருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தூதரக முயற்சிகள் நடைபெற்று வந்தாலும், ரஷ்ய தாக்குதல்கள் நிற்கவில்லை. சமீபத்திய தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். குளிர்காலத்தில் பொதுமக்களுக்கு வெப்பமும் குடிநீரும் கிடைக்காமல் செய்யும் நோக்கில், ரஷ்யா திட்டமிட்டு மின்சார வலையமைப்புகளை குறிவைத்து தாக்குகிறது என்று உக்ரைன் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Read More : ஆஸ்திரேலிய துப்பாக்கிச்சூட்டில் 15 பேரைக் கொன்ற தந்தை-மகன்! யார் இந்த சஜித், நவீத் அக்ரம்?

RUPA

Next Post

எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு எச்சரிக்கை! ஜனவரி 10 முதல் புதிய விதிகள் அமல்..!

Mon Dec 15 , 2025
விமானப் பயணிகளுக்கு இது ஒரு முக்கியமான செய்தி. எஸ்பிஐ கார்டு பயனர்களுக்கான விமான நிலைய லவுஞ்ச் அணுகலில் பெரிய மாற்றங்கள் வரவிருக்கின்றன. எஸ்பிஐ கார்டு தனது உள்நாட்டு விமான நிலைய லவுஞ்ச் அணுகல் திட்டத்தில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜனவரி 10, 2026 முதல் நடைமுறைக்கு வரும். இது செட் ஏ மற்றும் செட் பி என இரண்டு புதிய வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கிய விமான நிலையங்களில் […]
sbi card

You May Like