தெரு நாய்கள் தொடர்பான பிரச்சினை கடந்த சில மாதங்களாக சூடுபிடித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இருந்து தொலைக்காட்சி விவாதங்கள் வரை, தெரு நாய்கள் தொடர்பான பேச்சுக்கள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், “தெருநாய் தொடர்பான தீர்ப்புதான் என்னை மக்களிடையே கொண்டு சென்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது இனி கட்டாயமாகிறது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த உத்தரவு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், உரிமம் இல்லாமல் நாய்களை வளர்ப்பதும், அவற்றை சாலையில் விட்டு விடுவதும் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி தகவலின்படி, சென்னையில் சுமார் 1.8 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. முதற்கட்டமாக 4,000 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டு வருகிறது. அதேபோல், வீட்டு நாய்களுக்கும் உரிமம் பெற சிப் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் ஜனவரி 30ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன.
நாய் வளர்ப்பவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு சிப் பொருத்தாவிட்டால் ரூ.3,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம், நாய்களை பராமரிக்க முடியாமல் சாலையில் விட்டுவிடும் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதே முக்கிய நோக்கமாகும். சென்னையில் மைக்ரோ சிப் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால், தெருநாய்கள் மற்றும் வீட்டு நாய்கள் தொடர்பான பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என மாநகராட்சி நம்புகிறது.
Read more: 1 நிமிடத்தில் ரூ.1 லட்சம்..! 8 கோடி PF பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விவரம் இதோ..!