ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை தவறாக பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடி கும்பல்கள் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை சுருட்டும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த பின்னணியில், பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் இன்று ஸ்மார்ட்போன் என்பது மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. தொலைபேசி அழைப்புகள் மட்டுமின்றி, ஆன்லைன் ஷாப்பிங், பண பரிமாற்றம், மேப்ஸ், வங்கி சேவைகள் என பெரும்பாலான அன்றாட தேவைகளும் ஸ்மார்ட்போனிலேயே நிறைவேறும் நிலை உருவாகியுள்ளது. ஆனால், இதே வசதியை பயன்படுத்தி புதுப்புது சைபர் மோசடிகள் அரங்கேறி வருகின்றன.
சிறிது கவனக் குறைவு ஏற்பட்டாலும், மொத்த வங்கி இருப்பும் ஒரே நொடியில் காலியாகும் அபாயம் இருப்பதாக சைபர் குற்றத் தடுப்பு அமைப்புகள் எச்சரிக்கின்றன. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C – 14C அமைப்பு) அவ்வப்போது எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஸ்மார்ட்போனில் பயன்படுத்த வேண்டாம் என்று கூறி, மூன்று ஸ்க்ரீன் ஷேரிங் செயலிகளை அரசு பட்டியலிட்டுள்ளது.
தவிர்க்க வேண்டிய 3 செயலிகள்:
- AnyDesk
- TeamViewer
- QuickSupport
ஏன் இந்த செயலிகள் அபாயம்? இந்த செயலிகள், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு செல்போனை முழுமையாக கட்டுப்படுத்தும் வசதியை வழங்குகின்றன. இந்த வசதியை பயன்படுத்தி, சைபர் கிரைம் கும்பல்கள் செல்போனை கைப்பற்றி, OTP, வங்கி விவரங்கள், UPI அணுகல் போன்றவற்றை திருடி, நிதி இழப்பை ஏற்படுத்துகின்றனர். இதனால், இந்த மூன்று செயலிகளையும் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும், யாராவது தொலைபேசி மூலம் இந்த செயலிகளை இன்ஸ்டால் செய்ய கூறினால் அதை உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு அறிவுரை:
* தெரியாத நபர்களின் அழைப்புகளை நம்ப வேண்டாம்.
* ஸ்க்ரீன் ஷேரிங் அனுமதி ஒருபோதும் வழங்க வேண்டாம்.
* சந்தேகமான அழைப்புகள் வந்தால் உடனே 1930 என்ற சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணில் புகார் அளிக்கலாம்.



