வீட்டில் சமைப்பது ஒரு கலை. ஆனால் சமைத்த பிறகு பாத்திரங்களைச் சுத்தமாக வைத்திருப்பதே உண்மையான சவால். சிறிது கவனக்குறைவால் பாத்திரங்களின் அடியில் கருகல், கறை, துர்நாற்றம் போன்றவை உருவாகி விடும். இதை அகற்றுவதற்காக விலையுயர்ந்த ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தாமல், எளிய வீட்டு முறைகளில் சுத்தம் செய்யலாம்.
* சிலர் உணவு இருக்கும் அதே பாத்திரத்தில் நேரடியாக சூடு போடுவார்கள். இதனால் பாத்திரம் கருகி, அடியில் கருப்பு கறை ஏற்படும். இதனை அகற்ற, வெங்காயம் நறுக்கி தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைப்பது சிறந்த வழிமுறை. பின்னர் தேய்த்து கழுவினால் பாத்திரம் பழைய பளபளப்பை மீண்டும் பெறும்.
* பித்தளை, வெண்கலம், செம்பு போன்ற பாத்திரங்களுக்கு எலுமிச்சைச் சாறு மற்றும் உப்பு கலவையைப் பயன்படுத்தி தேய்த்தால் அவை பளிச்சென்று ஒளிரும். ஆனால் நீண்ட நாட்கள் பளபளப்பை காக்க சிறிதளவு சாம்பல் சேர்த்தால் சிறந்த விளைவு கிடைக்கும்.
* ஹாட் பாக்ஸ் போன்றவை நாளடைவில் சூடு தாங்கும் தன்மையை இழக்கும். அதை பராமரிக்க சூடான நீரில் சுத்தம் செய்வது அவசியம். இதனால் அதின் வெப்பம் நீண்ட நேரம் தங்கும்.
* பாத்திரங்களை எப்போதும் கவிழ்த்தே வைக்க வேண்டும், இதனால் பல்லி, பூச்சிகள் போன்றவை அதில் அடையாமல், தூசி படியாமலும் இருக்கும்.
* வெளியூருக்கு செல்லும்போது, குக்கர் வெயிட் போன்ற சிறு உபகரணங்களை மூடிய டப்பாவில் வைத்து வைப்பது சிறந்தது. இதனால் பூச்சிகள், புழுக்கள் போன்றவை அதில் அடையாது. மிக்ஸி ஜாரில் சிறிது எண்ணெய் தேய்த்து வைப்பது, அதை நீண்ட நாட்கள் பழுதில்லாமல் பாதுகாக்கும்.
* பாத்திரங்களில் உள்ள பிடிவாதமான கறைகளை அகற்ற, சுடு தண்ணீரில் பேக்கிங் சோடா சேர்த்து ஊறவைத்து ஸ்கிரப் செய்து கழுவலாம். இது புதிய பாத்திரம் போல் ஜொலிக்கச் செய்யும்.
* மேலும், 1 கப் வெதுவெதுப்பான நீரில் 2 தேக்கரண்டி உப்பு மற்றும் ஒரு எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்கவும். இந்தக் கலவையை பாத்திரங்களில் ஊற்றி சில நிமிடங்கள் விட்டு தேய்த்தால் கறையும் துர்நாற்றமும் மறையும்.
* அரிசி ஊறிய நீரும் ஒரு சிறந்த இயற்கை சுத்திகரிப்பான். அதிலுள்ள ஸ்டார்ச் மற்றும் சிட்ரிக் அமிலம் கறைகளை எளிதில் அகற்றும். இதனை பாத்திரத்தில் ஊற்றி சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் கழுவினால், பாத்திரம் ஜொலிக்கும்.
இவ்வாறு சில எளிய முறைகளை பின்பற்றினால், பாத்திரங்கள் சுத்தமாகவும் பளபளப்பாகவும் நீண்ட காலம் நீடிக்கும்.
Read more: எந்த யூ-டர்ன்களும் இல்லாமால் 14 நாடுகள் கடக்கும் உலகின் மிக நீளமான சாலை இதுதான்..!



