செப்டம்பரில் நடந்த ஆசியக் கோப்பைக்குப் பிறகு சுப்மன் கில் இடைவிடாமல் விளையாடி வருகிறார். மற்ற வீரர்கள் வெவ்வேறு வடிவங்களில் மாற்றப்பட்டாலும், கில் தற்போது டி20 துணை கேப்டனாகவும், ஒருநாள் போட்டித் கேப்டனாகவும் உள்ள அவர், கடந்த ஒரு மாதமாக நான்கு தொடர்களிலும் இடம்பெற்றுள்ளார்.
கடந்த வாரம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியின் 2வது நாளில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, திடீரென கழுத்தில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறினார். அதன்பின் சுப்மன் கில் பேட்டிங் செய்ய வரவே இல்லை. இந்திய அணியின் தோல்விக்கு சுப்மன் கில்லின் காயமும் ஒரு காரணமாக மாறியது. இதன்பின் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்ற சுப்மன் கில், கவுகாத்திக்கு புறப்பட்ட இந்திய அணியுடன் பயணித்தார். சுப்மன் கில்லின் உடல் மருத்துவ சிகிச்சைக்கு பலன் அளிக்கிறது என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கவுகாத்தியில் வந்து இறங்கிய சுப்மன் கில் இன்னும் கழுத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என்று தெரிந்தது. இப்படியான சூழலில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த பயிற்சியில் சுப்மன் கில் பங்கேற்கவில்லை. மாறாக சுப்மன் கில்லுக்கு மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நடக்க உள்ள நிலையில், நாளை சுப்மன் கில்லுக்கு ஃபிட்னஸ் சோதனை செய்யப்பட உள்ளது. அந்த சோதனை சுப்மன் கில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 2வது டெஸ்டில் களமிறங்குவார் என்று தெரிகிறது.
ஆனாலும், கில்லின் இந்த நிலைமைக்கு பணிச்சுமை காரணமாக இருக்கலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது. இருப்பினும், இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பணிச்சுமை என்ற கருத்தை நிராகரித்தார். Media Day-ல் பேசிய ஜியோஸ்டார் நிபுணர் ஆகாஷ் சோப்ரா, இந்த விவகாரம் குறித்து கவுதம் கம்பீரிடம் கேட்டப்போது, கில்லுக்கு ஓய்வு தேவைப்பட்டால் “ஐபிஎல்லைத் தவிர்க்க வேண்டும்” என்று கம்பீர் வெளிப்படையாக பதிலளித்ததாக தெரிவித்தார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்பு நான் கம்பீரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். உங்களுக்கு பணிச்சுமை இருந்தால், ஐபிஎல்லை (IPL) தவிர்த்துவிடுங்கள் என்பதே அவரது கருத்து. ஐபிஎல் அணியை வழிநடத்துவது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, விரும்பவில்லையென்றால் வழிநடத்த வேண்டாம். , நீங்கள் இந்தியாவுக்காக விளையாடும்போது, உடற்தகுதியுடன் இருந்தால், மன சோர்வு உங்களிடம் இருக்காது என்று சோப்ரா கூறினார்.
“ஒரு வீரர் உண்மையில் மனச்சோர்வை அனுபவிப்பதில்லையெனில், அவரது ஆட்டத் திறன் தொடரும் வரை அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதை சோப்ரா விளக்கினார். “மேலும் ஒரு பேட்ஸ்மேனாக, நான் அந்த கருத்தை ஆதரிக்கிறேன். நீங்கள் நல்ல ஃபார்மில் இருக்கும்போது, அதைப் பயன்படுத்தி அதிகபட்சமாக விளையாட வேண்டும். ஏனென்றால் மோசமான ஃபார்ம் உங்களை எப்போது தாக்கும், அடுத்த நல்ல ஃபார்ம் எங்கிருந்து வரும் என்பது உங்களுக்குத் தெரியாது.
பிசிசிஐ இன்னும் அவரை அதிகாரப்பூர்வமாக நிராகரிக்கவில்லை என்றாலும், கில் குணமடைந்து போட்டிக்குத் தயாராக இருப்பதற்கு குறைந்தது 10 நாட்கள் ஓய்வு தேவை என்று கூறப்படுகிறது. நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும், அதைத் தொடர்ந்து ஒரு டி20 தொடருக்கும் அவர் சரியான நேரத்தில் குணமடையவார் என்று கூறப்படுகிறது.



