மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரர், ஆன்லைனில் வெளியான கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி, ஒரு மோசடி கும்பலிடம் சிக்கி சுமார் ரூ. 11 லட்சம் இழந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமீபத்தில், அந்த ஒப்பந்ததாரர் ஆன்லைனில், “என்னை கர்ப்பமாக்கக்கூடிய ஒருவரைத் தேடுகிறேன்” என்ற விளம்பரத்தைப் பார்த்துள்ளார். இந்த விளம்பரத்தை கிளிக் செய்து தனது விவரங்களைப் பதிவு செய்த அவருக்கு, ஒரு பெண் பேசுவது போன்ற வீடியோவும் வந்துள்ளது.
அந்த வீடியோவில் உள்ள உறுதிமொழியை நம்பிய ஒப்பந்ததாரர், அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்ததாரரைத் தொடர்புகொண்ட மோசடிக் கும்பல், பதிவுக்கட்டணம், உறுப்பினர் கட்டணம், ரகசியம் காப்பதற்கான கட்டணம், நடைமுறை கட்டணம் எனப் பல்வேறு காரணங்களைக் கூறிப் பணம் பறிக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால், எப்படியாவது அந்தப் பெண்ணை சந்திக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில், அவர் சற்றும் யோசிக்காமல் மொத்தமாக ரூ. 11 லட்சம் வரை அனுப்பியுள்ளார். பணம் அனுப்பிய பின்னரும், எதிர்பார்த்த அழைப்பு வரவில்லை. பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், காவல்துறையில் புகார் அளித்தார்.
இது குறித்துப் பேசிய காவல்துறை ஆய்வாளர் சந்திரசேகர் சாவந்த், “ஒப்பந்ததாரரிடம் ரூ. 11 லட்சத்தை மோசடி கும்பல் பறித்துள்ளது. இதுபோன்ற ஆன்லைன் விளம்பரங்களை நம்பி மக்கள் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். இது அனைவருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.



