இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நம்மில் பலர் “நாளைக்கு ஆரம்பிக்கிறேன்” என்று சொல்லி உடற்பயிற்சியை தொடர்ந்து ஒத்திவைத்துக் கொண்டே இருப்போம். வீட்டு வேலைகள், அலுவலக பணி, போக்குவரத்து இவை அனைத்தும் சேர்ந்து உடல் சோர்வாகவும், மனம் சிதறலாகவும் மாறுகிறது. ஆனால் நிபுணர்கள் கூறுவது ஒன்றே.. தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடம் நடைப்பயிற்சி செய்வது உடலுக்கும் மனதுக்கும் ஆச்சரியமான நன்மைகளை தரும்.
செரிமானம் சிறப்பாகும்: உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடப்பது செரிமானத்திற்கு அதிக நன்மைகள் அளிக்கிறது. இது உணவை வயிற்றிலிருந்து குடலுக்குச் செல்லும் பாதையைச் சீராகச் செய்கிறது. வீக்கம், குமட்டல், மந்தம் போன்ற பிரச்சினைகள் குறையும். மேலும், குடல் பாக்டீரியா சமநிலை பெறுவதால் உங்கள் செரிமான அமைப்பு தினந்தோறும் சுறுசுறுப்பாக இருக்கும்.
கவனம் அதிகரிக்கும்: நடைபயிற்சி மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் நினைவாற்றல், கவனம் மற்றும் முடிவு எடுக்கும் திறன் மேம்படும். தினமும் நடப்பவர்கள் “மனம் தெளிவாக உள்ளது”, “கவனம் அதிகரித்துள்ளது” என்று சொல்வதை அடிக்கடி கேட்கலாம். அதற்கே இது காரணம்.
இரத்த சர்க்கரை: உணவுக்குப் பிறகு 15 நிமிட நடை, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த சிறந்த வழிகளில் ஒன்றாகும். இது இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி, சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்கிறது. நீண்ட காலத்தில், இது நீரிழிவு நோயைத் தடுக்கும் ஒரு எளிய பழக்கமாக மாறலாம்.
மூட்டுகள் வலுவடையும்: தினமும் நடைபயிற்சி செய்வது மூட்டுகளுக்கு இயற்கையான பயிற்சியாகும். வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலி, உறுப்பு சுளுக்கு போன்ற பிரச்சினைகள் தணியும். அதேசமயம், தசைகள் வலுப்பெற்று உடல் எடையும் சமநிலையில் இருக்கும்.
சருமம் பளபளப்பாகும்: நடக்கும்போது வியர்வை வெளிவருவதும், இரத்த ஓட்டம் அதிகரிப்பதும் சருமத்தில் இயற்கையான பளபளப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் முகத்தில் இருக்கும் மந்தமான தன்மை குறையும். புதிய செல்கள் உருவாகி, முகம் புத்துணர்ச்சியாக மாறும்.
மன அமைதி மற்றும் நல்ல தூக்கம்: நடைபயிற்சி மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மருந்து என்று கூறலாம். இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, செரோட்டோனின் போன்ற “மகிழ்ச்சி ஹார்மோன்களின்” உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் மன அமைதி, நல்ல தூக்கம், புத்துணர்ச்சி ஆகியவை கிடைக்கும்.



