சந்திரன் இன்று சூரியனை முழுமையாக மறைத்து, பகல் நேரத்தை இரவு போல மாற்றவுள்ளது. இயற்கையின் மிக அரிய நிகழ்வுகளில் ஒன்றான இந்த ‘முழு சூரிய கிரகணம்’, வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரு கண்கொள்ளாக் காட்சியாக அமையவுள்ளது.
புதன்கிழமை இன்று, வடக்கு அரைக்கோளத்தின் சில பகுதிகளில் இந்த முழு சூரிய கிரகணம் தோன்றவுள்ளது. ஒரு குறுகிய பாதையில் பகல் நேர வானம் இருளாக மாறும் இந்த அபூர்வ நிகழ்வை லட்சக்கணக்கான மக்கள் காண வாய்ப்புள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இது சற்று ஏமாற்றமளிக்கும் செய்திதான்; ஏனெனில், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இந்த கிரகணத்தைக் காண முடியாது. இருப்பினும், இணையதளம் வழியாக இந்த அபூர்வ நிகழ்வை நாம் நேரலையில் கண்டு களிக்கலாம்.
முழு சூரிய கிரகணத்தின் போது என்ன நடக்கும்?
சூரியன், பூமி ஆகிய இரண்டிற்கும் இடையே சந்திரன் நேர்கோட்டில் வரும்போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனின் அளவு சூரியனை விட மிகச் சிறியது என்றாலும், அது பூமிக்கு மிக அருகில் இருப்பதால் வானில் இரண்டும் ஒரே அளவிலேயே தோன்றும்.
சரியான நேர்கோட்டில் வரும்போது, சூரியனை சந்திரன் மறைப்பதால் பூமியின் மீது சந்திரனின் நிழல் விழும். சில நிமிடங்களுக்கு, சூரியனின் பிரகாசத்தால் சாதாரணமாக கண்ணுக்குத் தெரியாத அதன் வெளிப்புற வளிமண்டலமான ‘கொரோனா’ (Solar Corona), இருண்ட சந்திரனைச் சுற்றி ஒளிரும் வளையமாகத் தெரியும். இதை நேரடியாகக் காண முடியாது என்பதால், அறிவியலாளர்கள் முழு சூரிய கிரகணத்தை மிக முக்கிய வானியல் நிகழ்வாகக் கருதுகின்றனர்.
கிரகணம் எந்த நேரத்தில், எங்கு தெரியும்?
வடக்கு ரஷ்யாவில் தொடங்கும் இந்த முழு கிரகணப் பாதை, கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்தைக் கடந்து, வடக்கு ஸ்பெயின் வழியாகச் சென்று போர்ச்சுகலின் ஒரு சிறிய பகுதியைச் சென்றடையும். ஐரோப்பாவின் பெரும்பகுதி, வட அமெரிக்காவின் சில பகுதிகள் மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட பரந்த பகுதிகளில் ‘பகுதி சூரிய கிரகணத்தை’ காண முடியும்.
1999-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐரோப்பாவில் தோன்றும் முதல் முழு சூரிய கிரகணம் இது என்பதால் அங்கு இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நேரப்படி (ஆகஸ்ட் 12) இன்று இரவு 9:04 மணிக்குத் தொடங்கும் இந்த கிரகணம், நாளை (ஆகஸ்ட் 13) அதிகாலை 2:15 மணி வரை நீடிக்கும். இரவு 11:16 மணியளவில் கிரகணம் அதன் உச்சக்கட்டத்தை அடையும். மையப்பாதையில் சுமார் 2 நிமிடம் 18 வினாடிகள் இந்த முழு கிரகணம் நீடிக்கும்.
ஐஸ்லாந்தின் ரெய்காவிக் மற்றும் ஸ்பெயினின் பல நகரங்களில் முழு கிரகணத்தை நேரில் காண முடியும். ஆனால் இந்தியா, முழு கிரகணம் மற்றும் பகுதி கிரகணம் தெரியும் பகுதிகள் இரண்டிற்கும் வெளியே உள்ளதால் இங்கு கிரகணம் தெரியாது.
முழு சூரிய கிரகணத்தை எப்படிப் பார்ப்பது?
கிரகணம் தெரியாத பகுதிகளில் உள்ளவர்கள், விண்வெளி ஆய்வு மையங்கள் வழங்கும் நேரலை ஒளிபரப்பு மூலம் இதைக் காண்பதே பாதுகாப்பானது. பகுதி கிரகணத்தை நேரடியாகக் காண விரும்புவோர் கண்டிப்பாக சான்றளிக்கப்பட்ட சூரியக் கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சாதாரண கூலிங் கிளாஸ்கள் பாதுகாப்பானவை அல்ல.
சிறப்பு சூரிய வடிகட்டிகள் பொருத்தப்படாமல் கேமராக்கள், பைனாகுலர்கள் அல்லது தொலைநோக்கிகள் மூலம் கிரகணத்தை நேரடியாகப் பார்க்கக் கூடாது என நாசா எச்சரித்துள்ளது. எனவே, இந்திய வானியல் ஆர்வலர்கள் இந்த ஆகஸ்ட் 12 கிரகணத்தை இணைய நேரலைகள் மூலமாகவே கண்டு ரசிக்க முடியும்.
இந்தியாவில் எப்போது முழு சூரிய கிரகணம் தோன்றும்?
முழு சூரிய கிரகணத்தைக் காண இந்தியா இன்னும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து நேரில் பார்க்கக்கூடிய அடுத்த முழு சூரிய கிரகணம் மார்ச் 20, 2034 அன்று நிகழும். இது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் உள்ளிட்ட பரந்த நாடுகளின் வழியே பயணித்து ஆசியாவைக் கடக்கும்.



