AI (செயற்கை நுண்ணறிவு) சாட்போட்களை அதிக நேரம் பயன்படுத்துவோருக்கு மனஅழுத்தம் ஏற்படும் அறிகுறிகள் 30 சதவீதம் அதிகமாக இருப்பதாக JAMA Network Open என்ற அறிவியல் இதழில் வெளியான புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
“தினசரி ஏ.ஐ. பயன்பாடு பொதுவாகவே அதிகமாக உள்ளது; மேலும் அது மனஅழுத்தம், கவலை (Anxiety), எரிச்சல் (Irritability) போன்ற எதிர்மறை மனநிலை அறிகுறிகளுடன் கணிசமான தொடர்பு கொண்டுள்ளது,” என்று இந்த ஆய்வை வழிநடத்திய மனநல மருத்துவர் டாக்டர் ராய் பெர்லிஸ் (Dr Roy Perlis) கூறினார்.
வயதும் முக்கிய காரணம்
இந்த ஆய்வின்படி, வயதும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்ட நடுத்தர வயதினர் அதிக அபாயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் அவர்கள் ஜெனரேட்டிவ் AI-யை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
45 முதல் 64 வயதுக்குட்பட்டவர்களில் ஏ.ஐ. பயனாளிகள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் அபாயம் 54 சதவீதம் அதிகமாக இருந்தது. அதேபோல், 25 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் இந்த அபாயம் 32 சதவீதம் அதிகமாக இருந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.. இதன் மூலம், “சிலர் ஏ.ஐ. பயன்பாட்டுடன் தொடர்புடைய மனஅழுத்த அறிகுறிகளை அனுபவிக்க அதிக வாய்ப்பு உள்ளவர்கள்” என ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.
AI தான் மனநலப் பிரச்சினைக்கு காரணமா?
இந்த ஆய்வின் முடிவில், மனஅழுத்தம் அதிகரிப்பதற்கு நேரடியாக AI தான் காரணமா, அல்லது ஏற்கனவே மனநலப் பிரச்சினை உள்ளவர்கள் உதவி மற்றும் ஆதரவு தேடுவதற்காக ஏ.ஐ.-யை அதிகமாக பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்டறிவது கடினம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பல நேரங்களில் தனிமையை கடக்கவும், நண்பர்களைத் தேடவும், பலர் இணையத்தில் நீண்ட நேரம் செலவிடுகிறார்கள் என்பதும் குறிப்பிடப்படுகிறது.
இளம் வயதினர் அதிகமாக பாதிக்கப்படுகிறார்களா?
ஜெனரேட்டிவ் AI சாட்போட்கள் அமெரிக்க இளம் வயதினரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பகுதியாக மாறி வருகின்றன. Pew Research Center நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, 64 சதவீதத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாட்போட்களை பயன்படுத்துகிறார்கள். அதில் 10 பேரில் 3 பேர் தினசரி பயன்படுத்துவதாக கூறியுள்ளனர்.
மேலும், இளம் வயதினர் இந்த அபாயங்களுக்கு அதிகமாக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் இந்த வயதில் மூளை வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அனுபவங்களால் அதிகமாக பாதிக்கப்படுகிறது. இத்தகைய நேரத்தில் பல புதிய விஷயங்களுக்கு அவர்கள் முகம் கொடுக்கிறார்கள்.
எதிர்மறை எண்ணங்களை மேலும் வலுப்படுத்தும் அபாயம்
AI சாட்போட்கள் சில சமயங்களில் எதிர்மறை எண்ணங்களை அறியாமலேயே வலுப்படுத்தக் கூடும். ஒரு பயனர் தொடர்ந்து பயம், சோகம், தன்னைத் தானே குறைத்து எண்ணுதல் (Self-doubt) போன்ற விஷயங்களைப் பற்றி பேசினால், சாட்போட் அதையே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு மனநல மருத்துவர் செய்வதைப் போல, அந்த எண்ணங்களை சரியான முறையில் சவால் செய்து மாற்ற உதவாது. இதனால் மனஅழுத்தமான சிந்தனைகள் மேலும் ஆழமாகலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அப்படியெனில் AI உதவியாக இருக்க முடியாதா?
இந்த கவலைகளுக்கு மத்தியிலும், AI சாட்போட்கள் இயல்பாகவே தீங்கானவை அல்ல என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். மிதமான அளவில் பயன்படுத்தினால், அவை உற்பத்தித் திறன், கற்றல், குறுகிய கால உணர்ச்சி ஆதரவு போன்றவற்றிற்கு பயனுள்ளதாக இருக்க முடியும்.
சில மனநல செயலிகள் AI-யை பொறுப்புடன் பயன்படுத்தி, பயனாளிகளை நிபுணர்களிடம் உதவி கேட்க ஊக்குவிக்கின்றன. அதேபோல், தியானம் (Mindfulness) செய்யவும், ஆரோக்கியமான சமாளிப்பு முறைகள் உருவாக்கவும் உதவுகின்றன.
சமநிலை முக்கியம்
இதில் முக்கியமானது சமநிலை தான். AI சாட்போட்கள் உண்மையான மனித உறவுகளுக்கும், தொழில்முறை மருத்துவ பராமரிப்பிற்கும் மாற்றாக இருக்கக் கூடாது; அவற்றுக்கு துணையாக மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மனநல நிபுணர்கள் என்ன பரிந்துரைக்கிறார்கள்?
மனநல நிபுணர்கள், சாட்போட் பயன்பாட்டிற்கு எல்லைகள் வைக்க வேண்டும் என்றும், உண்மையான உலக உறவுகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள். தொடர்ச்சியான சோகம், சமூகத்திலிருந்து விலகுதல், அல்லது உணர்ச்சி ஆதரவுக்காக AI .-யை மட்டுமே நம்பும் நிலை போன்ற அறிகுறிகள் தெரிந்தால், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் உதவி கேட்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், பெற்றோர் தங்களின் இளைய வயது குழந்தைகள் சாட்போட் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும். அவர்களை ஆஃப்லைன் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் மேலும் ஆய்வு தேவை
AI தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், அதன் நீண்டகால மனநல விளைவுகளைப் புரிந்துகொள்ள மேலும் பொறுப்பான வடிவமைப்பு, பயனர் விழிப்புணர்வு மற்றும் தொடர்ச்சியான ஆய்வுகள் அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
எனவே AI சாட்போட்கள் பயனுள்ளதாக இருக்கலாம்; ஆனால் அவற்றை அளவோடு, சுய கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தாவிட்டால், மனநலத்திற்கு அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.



