எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நாட்டில் போதுமான அளவில் கேஸ் கையிருப்பு இருப்பதாகவும், உற்பத்தி 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
இந்தியா தற்போது சுமார் 40 நாடுகளில் இருந்து எரிவாயு விநியோகத்தை பெற்றுக்கொண்டு வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. மேலும் முன்பு 55 சதவீதமாக இருந்த ஹார்முஸ் நீரிணைக்கு வெளியிலிருந்து வரும் எரிவாயு இறக்குமதி பங்கு தற்போது 70 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விநியோகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் உள்ள அனைத்து சுத்திகரிப்பு ஆலைகளும் (Refineries) தற்போது 100 சதவீத திறனில் இயங்கி வருவதாகவும், இந்நிலையில் உடனடி விலை உயர்வு தேவையில்லை என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
“எரிவாயு பற்றாக்குறையை சமாளிக்க தொழிற்துறைக்கு வழங்கப்படும் எரிவாயுவிலிருந்து ஒரு பகுதி மாற்றி பயன்படுத்தப்படுகிறது. முன்பு 21 நாட்களுக்கு பிறகு சிலிண்டர் பதிவு (booking) செய்யும் நடைமுறை இருந்தது. தற்போது அது 25 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், முன்பு எரிவாயு சிலிண்டர் கையிருப்பு விநியோகஸ்தர்களிடம் சேர்வதற்கு சுமார் 2.5 நாட்கள் எடுத்துக்கொண்டது. தற்போது கூட அதே அளவு நேரமே ஆகிறது என்றும் கூறப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து சுத்திகரிப்பு ஆலைகளும் முழு திறனில் செயல்பட்டு வருகின்றன. தினமும் நாடு முழுவதும் சுமார் 60 லட்சம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வு பற்றாக்குறையால் அல்ல
எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டிருப்பது தற்போதைய எரிவாயு பற்றாக்குறையால் அல்ல என்றும் அரசு வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன. கடந்த ஆண்டு ஏற்பட்ட வருவாய் இழப்பை (under-recovery) சமநிலைப்படுத்துவதற்காகவே இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த சனிக்கிழமை ரூ.60 உயர்த்தப்பட்டது. ஒரு ஆண்டுக்குள் இது இரண்டாவது முறை விலை உயர்த்தப்பட்டதாகும். மேற்கு ஆசியா பிரச்சினையைத் தொடர்ந்து உலகளவில் எரிசக்தி விலை அதிகரித்ததால், உலகில் மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வோர் நாடாக இருக்கும் இந்தியாவிலும் அதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மானியம் சமையல் எரிவாயு சிலிண்டர், பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படும் எல்.பி.ஜி தற்போது டெல்லியில் 14.2 கிலோ எடையுள்ள ஒரு சிலிண்டர் ரூ.913 ஆக விற்கப்படுகிறது. இதற்கு முன்பு அதே சிலிண்டர் ரூ.853 ஆக இருந்தது என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பிரதான் மந்திரி திட்டத்தின் பயனாளிகளும் இந்த விலை உயர்வை ஏற்க வேண்டியிருக்கும். 2016 முதல் இந்த திட்டத்தின் மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச எல்.பி.ஜி. இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் பயனாளிகள் ஆண்டுக்கு 12 முறை வரை சிலிண்டர் நிரப்புவதற்கு ஒரு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் பெறுகின்றனர். அந்த மானியத்தை கழித்த பிறகு, 14.2 கிலோ எடையுள்ள ஒரு எல்.பி.ஜி சிலிண்டருக்கு அவர்கள் தற்போது ரூ.613 செலுத்த வேண்டியுள்ளது.



