ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் பற்றி எதுவும் இல்லாததால், கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு.
சீனாவின் கிங்டாவோ நகரில் நடைபெற்ற SCO (Shanghai Cooperation Organisation) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து எந்தவொரு குறிப்பும் இல்லாததை தொடர்ந்து, இந்தியா கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்துள்ளது.
இந்த மாநாட்டில், இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சீனா, ரஷ்யா, ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் கலந்து கொண்டனர். ஆனால், கூட்டத்தின் இறுதிக் கூட்டறிக்கையில் இந்தியாவை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்த எந்தவொரு விவரமும் சேர்க்கப்படவில்லை.
அதனை தொடர்ந்து, இந்தியா “இந்த கூட்டத்தில் எங்களது பாதுகாப்பு கவலைகள் கவனிக்கப்படவில்லை” என்ற கருத்துடன், அறிக்கையில் கையெழுத்திட மறுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்த சூழலில் , SCO அறிக்கையில் அந்த தாக்குதல் குறித்த எந்தவொரு கண்டனமும் இடம்பெறாதது, இந்தியாவை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மேலும், அந்த அறிக்கையில், பலுசிஸ்தான் பிரச்னையைக் குறிப்பிட்டு, அப்பகுதியில் இந்தியா அமைதியின்மையை உருவாக்குவதாக மறைமுகமாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பலுசிஸ்தான் சுதந்திரப் போராட்டத்துக்கும் இந்தியாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று பாகிஸ்தானின் குற்றச்சாட்டு மத்திய அரசு ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
SCO என்பது பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான முக்கிய பன்னாட்டு அமைப்பாக இருந்தாலும், தற்காலிக அரசியல் சந்தர்ப்பங்களில் உண்மை சிந்தனைகள் மறைக்கப்படுவதாக இந்தியா கருதுகிறது. அதனைத்தான் இம்முறை தனது கையெழுத்து மறுப்பு மூலம் வெளிக்காட்டியுள்ளது.
Read more: இவர்களின் போலி பக்தி, அரசியல் நாடகத்தை யாரும் ஏற்கமாட்டார்கள்.. பாஜக – அதிமுகவை விளாசிய ஸ்டாலின்..