உலகின் வளர்ந்து வரும் சக்தியாக இந்தியா உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு பின்னால், கடன்கள், முதலீடுகள் மற்றும் சர்வதேச நிதி ஒத்துழைப்புகள் இணைந்த ஒரு சிக்கலான அமைப்பு உள்ளது. இந்தியா அதிக கடன் வாங்கும் நாடா, அல்லது பொறுப்புடன் கடன் நிர்வகிக்கும் நாடா என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது. இந்தியாவுக்கு அதிகமாக கடன் வழங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் எவை? அதே நேரத்தில் இந்தியா பல்வேறு நாடுகளுக்கு எப்படி உதவிகளை வழங்குகிறது? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்..
இந்தியாவின் உயர்ந்து வரும் வெளிநாட்டு கடன்
உள்நாட்டு தேவைகள் மற்றும் உலக பொருளாதார சூழ்நிலைகளின் தாக்கத்தால், இந்தியாவின் வெளிநாட்டு கடன் காலப்போக்கில் அதிகரித்து வருகிறது. 2020 மார்ச் மாத இறுதியில், இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் சுமார் 558.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக இருந்தது. இதில் வர்த்தக கடன்கள் (Commercial Borrowing), வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் வைப்பு தொகைகள் (NRI Deposits), மற்றும் பல்தரப்பு நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடன்கள் அடங்கும்.
உலக சந்தைகளிலிருந்து மூலதனம் திரட்டுவது இந்தியாவின் பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய அங்கமாக உள்ளது. இதன் மூலம் உட்கட்டமைப்பு திட்டங்கள், தொழில்துறை வளர்ச்சி மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதி கிடைக்கிறது.
இந்தியாவுக்கு அதிகம் கடன் வழங்குபவர்கள் யார்?
இந்தியாவின் வெளிநாட்டு கடன் ஒரே ஒரு நாட்டின் மீதான சார்பாக இல்லை. பெரும்பாலான கடன்கள் சர்வதேச சந்தைகள், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து வருகின்றன.
மேலும் உலக வங்கி (World Bank), ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) போன்ற பல்தரப்பு நிதி நிறுவனங்கள் இந்தியாவுக்கு முக்கிய கடன் வழங்குநர்களாக உள்ளன. கொரோனா காலம் போன்ற நெருக்கடி சூழ்நிலைகளில், இந்நிறுவனங்கள் வழங்கிய கடன்கள் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSMEs) பாதுகாப்பு, சுகாதார அமைப்பு மேம்பாடு, கல்வித் துறை ஆதரவு போன்றவற்றிற்கு முக்கிய உதவியாக இருந்தன. இவ்வகை கடன்கள் நெருக்கடி மேலாண்மையில் முக்கிய கருவியாக அமைந்தன.
NRI வைப்பு தொகைகள் மற்றும் வர்த்தக கடன்களின் பங்கு
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் (NRI) வைக்கும் வைப்பு தொகைகள், இந்தியாவின் வெளிநாட்டு கடன் அமைப்பில் மிக முக்கிய பங்காற்றுகின்றன. இவை இந்தியாவுக்கு நிலையான மற்றும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான நிதி ஆதாரமாக விளங்குகின்றன. அதேபோல், வர்த்தக கடன்கள் மூலம் இந்திய நிறுவனங்கள் உலக சந்தைகளில் போட்டி வட்டியில் மூலதனம் திரட்ட முடிகிறது. இது உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க உதவுகிறது.
ஆனால், இவ்வகை கடன்களுடன் சில ஆபத்துகளும் உள்ளன. வட்டி விகித மாற்றங்கள் மற்றும் நாணய மாற்று விகித ஏற்ற இறக்கங்கள் போன்றவை, எதிர்காலத்தில் கடன் சுமையை அதிகரிக்கும் வாய்ப்பையும் கொண்டுள்ளன.
இந்தியா – கடன் பெறுபவரா? உலகிற்கு உதவும் கடனளிப்பவரா?
இந்தியா இன்று ஒரே நேரத்தில் கடன் பெறும் நாடாகவும், உலகின் பல நாடுகளுக்கு உதவி வழங்கும் முக்கிய நாடாகவும் விளங்குகிறது.
கடன் பெறும் நாடாக இந்தியா
இந்தியா உலக சந்தைகளில் இருந்து மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களில் இருந்து கடன் பெறுகிறது. ஆனால் இது சுமையாக மாறும் அளவிற்கு இல்லை. வெளிநாட்டு கடன் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.. கடன் – மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) விகிதம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்தியாவிடம் போதுமான வெளிநாட்டு நாணய கையிருப்பு இருப்பதால் கடன்களை சரியாக திருப்பிச் செலுத்தும் திறன் உள்ளது
அதனால் பொருளாதார வல்லுநர்கள், “உற்பத்தி வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் பயன்படுத்தப்படும் வரை வெளிநாட்டு கடன் ஆபத்தாக மாறாது” என்று கூறுகின்றனர்.
உதவி வழங்கும் நாடாக இந்தியா
கடன் வாங்கினாலும், இந்தியா உலகிற்கு பெரும் உதவிகளை வழங்குகிறது. 65க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா பொருளாதார உதவி வழங்குகிறது.. உதவிகள்: கடன் வரிசைகள் (Lines of Credit), மானியங்கள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, மனிதாபிமான உதவி இதில் குறிப்பாக அண்டை நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் இவற்றுடன் இந்தியாவின் உறவுகள் மிகவும் வலுவாக உள்ளன. இதன் மூலம் இந்தியா உலகளவில் நம்பகமான, பொறுப்புள்ள மற்றும் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாடு என்ற பெயரை பெற்றுள்ளது.
வெளிநாட்டு கடன் – அபாயமா?
பொருளாதார நிபுணர்கள் இதுகுறித்து பேசிய போது “ கடன் சரியான வளர்ச்சி திட்டங்களில் பயன்படுத்தப்பட்டால் அது அபாயமில்லை.. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டே இருப்பதால் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் உறுதியானது.. கடன் மூலம் கிடைக்கும் பணம் உண்மையில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்வது” என்று தெரிவித்துள்ளனர்..
எனவே இந்தியா இன்று கடன் பெறும் நாடு, அதே சமயம் பல நாடுகளுக்கு உதவி வழங்கும் உலகளாவிய கூட்டாளி என்ற இரட்டை பங்குடன், உலக அரசியலில் ஒரு பொறுப்பான சக்தியாக உயர்ந்து வருகிறது.



